மத்தூர் அருகேகுட்டையில் தவறி விழுந்த பள்ளி மாணவனின் கதி என்ன?தேடும் பணி தீவிரம்

Update: 2023-04-23 19:00 GMT

மத்தூர்:

மத்தூர் அருகே குட்டையில் தவறி விழுந்த பள்ளி மாணவனை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

பள்ளி மாணவன்

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள அந்தேரிப்பட்டி ஊராட்சி கொட்டா பள்ளனூர் கிராமத்தில் சுண்ணாம்பு பாறைகளை வெட்டி எடுக்கும் குட்டைகள் உள்ளன. தற்போது இந்த குட்டைகளில் நீர் நிரம்பி உள்ளதால் அதில் இருந்து விவசாயிகள் தண்ணீரை எடுத்து விவசாயத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சில சுண்ணாம்பு குட்டைகளில் அதிகளவில் மீன்களும் உள்ளன.

இந்த நிலையில் கொட்டா பள்ளனூர் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி மாது- தீபா தம்பதிக்கு இளவரசன் வயது 12 என்ற மகன் இருந்தான். இவன் அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 6-ம் படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று மதியம் இளவரசன் மீன் பிடிப்பதற்காக பழனி என்பவருக்கு சொந்தமான சுண்ணாம்பு குட்டைக்கு சென்றான்.

குட்டைக்குள் விழுந்தான்

சுமார் 30 அடி ஆழம் கொண்ட அந்த கிணறு முழுவதும் தண்ணீர் நிரம்பி இருந்தது. இதனை தொடர்ந்து விளையாட்டுக்காக மீன் பிடிக்கச் சென்ற இளவரசன் சுண்ணாம்பு குட்டைக்குள் தவறி விழுந்தான். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக ஊத்தங்கரை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் விரைந்து சுண்ணாம்பு குட்டையில் மூழ்கிய இளவரசனை தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் பல மணி நேரம் தேடியும் இளவரசனை கண்டுபிடிக்க முடியவில்லை.

தண்ணீர் வெளியேற்றும் பணி

பின்னர் 2 பம்பு செட்டுகள் கொண்டு வரப்பட்டு குட்டையில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் பொதுமக்களும், தீயணைப்பு துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர் எனினும் இரவு நேரம் நெருங்கி விட்டதால் மின்விளக்குகள் மூலம் நீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி மாணவன் சுண்ணாம்பு குட்டையில் மூழ்கிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்