அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில், மடங்களுக்கு தமிழ்நாடு புதிய வாடகை சட்டம் பொருந்தாது - மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு

அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில், மடங்களுக்கு தமிழ்நாடு புதிய வாடகை சட்டம் பொருந்தாது என மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-10-07 16:34 GMT

மதுரை,

மதுரை மேலமாசி வீதியில் உள்ள ஆதீனமடத்திற்கு சொந்தமான ஒரு இடத்தை பகவர்லால் என்பவர் கடந்த 2007-ம் ஆண்டு தரைவாடகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால் ஒப்பந்த விதிமுறைகளை மீறி 2013-ல் பகவர்லால், சம்பந்தப்பட்ட இடத்தில் பெரிய கட்டிடம் கட்டியது மட்டுமின்றி, வாடகையும் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

இந்த ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக தமிழ்நாடு புதிய வாடகை சட்டத்தின்படி, கோர்ட்டில் பகவர்லால் மனுத்தாக்கல் செய்துள்ளார். இது குறித்து ஆதீன மடத்திற்கு ஆர்.டி.ஓ. நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில், மடங்களுக்கு தமிழ்நாடு புதிய வாடகை சட்டம் பொருந்தாது என்பதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ஆதீன மடம் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து நில ஆக்கிரமிப்பு மற்றும் வாடகை வசூல் குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் நிலுவையில் உள்ள மனுவை விரைவில் விசாரணை செய்து முடிக்க வேண்டும் என்றும், மேலும் வாடகை நிலுவைத் தொகைகளை மதுரை ஆதீன மடம் வசூல் செய்து கொள்ளலாம் என்றும் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, வருவாய் கோட்டாட்சியர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்