என்ஜினீயரின் உடல் விமானம் மூலம் கோவை வந்தது

லண்டனில் மர்மமான முறையில் இறந்த என்ஜினீயரின் உடல் விமானம் மூலம் நேற்று கோவைக்கு கொண்டு வரப்பட்டது.;

Update:2023-07-07 00:15 IST

கோவை


லண்டனில் மர்மமான முறையில் இறந்த என்ஜினீயரின் உடல் விமானம் மூலம் நேற்று கோவைக்கு கொண்டு வரப்பட்டது.


என்ஜினீயர்


கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் தென்றல் நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மகன் ஜீவந்த் (வயது23). என்ஜினீயர். இவர், இங்கிலாந்தில் உள்ள ஆஸ்டன் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. இன்டர்நேஷனல் பிசினஸ் என்ற மேல்படிப்பு படித்து வந்தார்.


இவர், கடந்த மாதம் 20-ந் தேதி மாலை கல்லூரி முடிந்ததும் அங்குள்ள நூலகத்திற்கு செல்வதாக தனது நண்பர்களிடம் கூறி விட்டு சென்றார். இரவு 9 மணியளவில் நண்பர்கள், தொடர்பு கொண்டு சாப்பிட வருமாறு அழைத்தனர்.

அதற்கு ஜீவந்த் "நீங்கள் செல்லுங்கள் நான் சற்று நேரம் கழித்து வருகிறேன் "என கூறியுள்ளார்.


உடல் கால்வாயில் மீட்பு


ஆனால் வெகு நேரமாகியும் ஜீவந்த் வரவில்லை. இதனால் அவரது நண்பர்கள், மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்ட போது செல்போன் சுவிட்ச் ஆப் என வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் கொடுத்த தகவலின் பேரில் கல்லூரி நிர்வாகத்தினர் லண்டன் போலீசில் புகார் செய்தனர்.


அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரை தேடி வந்தனர். இந்த நிலையில், லண்டன் அருகே உள்ள பர்மிங்காம் கால்வாயில் ஜீவந்த் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


நூலகத்திற்கு சென்றவர் பர்மிங்காம் கால்வாயில் கிடந்தது எப்படி? அவரை யாராவது தாக்கினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனாலும் மாணவர் இறப்பிற்கான காரணம் மர்மமாக உள்ளது.


இந்திய தூதரகம் நடவடிக்கை


ஜீவந்த் இறந்த தகவல் கோவையில் உள்ள அவரது பெற்றோ ருக்கு தெரிவிக்கப்பட்டது. அதை கேட்டு அவரது பெற்றோர் கதறி அழுதனர். இறந்த தங்களது மகனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தூதரகத்திடம் அவர்கள் கேட்டு கொண்டனர்.


மேலும் மகனின் சாவு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இதற்கிடையே இறந்த மாணவரின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இந்திய தூதரகம் மேற்கொண்டது.


உறவினர்கள் கண்ணீர்


அதைத்தொடர்ந்து லண்டனில் இருந்து மாணவரின் உடல் மும்பை கொண்டு வரப்பட்டு, மும்பையில் இருந்து மற்றொரு விமானம் மூலம் கோவை விமான நிலையத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டது.


பின்னர் கார் மூலம் தென்றல் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. மகனின் உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள மின்மயானத்தில் நேற்று மாலையில் ஜீவந்த் உடல் எரியூட்டப்பட்டது.

மேலும் செய்திகள்