மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
Published on

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி அருகே உள்ள பழஞ்சநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகன் வெற்றிச்செல்வன்(வயது 24). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவர் அடிக்கடி இவரது நண்பரை பார்க்க அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரிக்கு சென்று பார்த்து வரும்போது, அங்கு டிப்ளமோ படிக்கும் 20 வயதுடைய மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் அந்த பழக்கம் நாளடைவில் அதிகமாகி காதலாக மாறியது. மேலும் வெற்றிச்செல்வன் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள்கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அந்த பெண் வெற்றிச்செல்வனிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டபோது, திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டார். இதையடுத்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். புகாரின்பேரில் அப்பகுதி சிறிய கோவிலில் வைத்து இரு குடும்பத்தினரும் சேர்ந்து திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பின் சென்னை செல்வதாக கூறி சென்றவர் குழந்தை பிறந்தும் வரவில்லை. மீண்டும் மீண்டும் தொடர்பு கொண்டு பேசிய போது பதில் அளிக்கவில்லை. அந்த பெண் வெற்றிச்செல்வனுக்கு தொடர்ந்து போனில் தொடர்பு கொண்டு உள்ளார் இருப்பினும் பதிலளிக்கவில்லை. ஒரு சில முறை பேசும்போது வெற்றிச்செல்வன் தன்னிடம் பேசினால் கொலை செய்து விடுவதாக அந்த பெண்ணை மிரட்டி உள்ளார். இதுகுறித்து அப்பெண் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, வெற்றிச்செல்வன் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com