விதையின் ஈரப்பதத்தை அறிய பரிசோதனை செய்ய வேண்டும்

விவசாயிகள் விதைகளின் ஈரப்பதத்தை அறிய அவற்றை பரிசோதனை செய்ய வேண்டும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார். கடலூர் விதைப்பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் சோபனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2023-07-06 18:45 GMT

ஒவ்வொரு பயிரின் விதைக்கும் ஒரு குறிப்பிட்ட ஈரப்பதம் மட்டுமே இருக்க வேண்டும். உற்பத்தி செய்த விதைக்கு விதைச்சான்று பெறுவதற்கும், விதையை சேமிப்பதற்கும் ஈரப்பதம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிகபட்ச ஈரப்பதம் ஒவ்வொரு பயிருக்கும் மாறுபடும். நெல்லுக்கு 13 சதவீதமும், சிறுதானியத்திற்கு 12 சதவீதமும், பருப்பு வகை பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்து பயிர் விதைகளுக்கு 9 சதவீதம் என ஈரப்பதம் இருக்கலாம்.

சேமிக்கும் விதையில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஈரப்பதம் இருந்தால் விதை சேமிப்பின் போது பூச்சி நோய் தாக்குதல் ஏற்பட்டு விதையின் முளைப்பு திறன் பாதிக்கப்படும். முளைப்புத்திறன் பாதிக்கப்பட்டால் அந்த விதை விதைப்பதற்கு ஏற்றதாக இருக்காது. ஆகவே விதையின் முளைப்பு திறனை பாதுகாக்க விதையின் ஈரத்தன்மையை அறிந்து விதைகளை தேவையான ஈர தன்மைக்கு கொண்டு வர வேண்டும். இதன் மூலமே நீண்ட நாட்களுக்கு விதைகளை சேமித்து வைக்க முடியும்.

பரிசோதனை

விதை உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் தங்களிடம் உள்ள விதையின் ஈரப்பதத்தை அறிந்து கொள்வதற்கு விதை குவியலில் இருந்து 100 கிராம் விதை மாதிரியை எடுக்க வேண்டும். அந்த விதைகளை காற்று புகாத பிளாஸ்டிக் பைகளில் அடைத்து பயிர் ரகம், குவியல் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு விதையின் ஈரப்பதத்தை அறிய பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும்.

முளைப்புத்திறன் மற்றும் புறத்தூய்மை ஆகிய விதைத்தரங்களை அறிந்து கொள்ள வேண்டிய நிலை இருந்தால் தேவையான அளவு விதை மாதிரிகளை எடுத்து ஈரப்பதம் அறிய வேண்டிய விதை மாதிரியுடன் இன்னொரு பையிலிட்டு பயிர் ரகம், குவியல் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும்.

முகப்பு கடிதத்துடன் ஒரு விதை மாதிரிக்கு ரூ.80 வீதம் கட்டணம் செலுத்தி நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கடலூர் சாவடியில் இயங்கி வரும் விதைப் பரிசோதனை நிலையத்திற்கு அனுப்ப வேண்டும். இந்த விதை மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்