சவுக்கு சங்கர் மீது மாணவி ஸ்ரீமதியின் தாயார் புகார்

சவுக்கு சங்கர் மீது மாணவி ஸ்ரீமதியின் தாயார் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Update: 2024-05-23 02:27 GMT

சென்னை,

பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் 'யூடியூப்பர்' சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது கஞ்சா உள்ளிட்ட வழக்குகளும் பாய்ந்துள்ளது. குண்டர் தடுப்பு சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சவுக்கு சங்கர் மீது கடந்த 2022-ம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளி விடுதியில் மர்மமாக உயிரிழந்த கடலூர் மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சவுக்கு மீடியா என்ற யூடியூப் சேனலில் கடந்த 20.7.2022 அன்று 'கள்ளக்குறிச்சி விவகாரம், மர்மம் அவிழ்க்கும் சவுக்கு' என்ற தலைப்பில் சவுக்கு சங்கர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் எனது மகள் குறித்தும், என்னை பற்றியும், குடும்பத்தினர் பற்றியும் உண்மைக்கு புறம்பான ஆதாரமற்ற செய்திகளை சவுக்கு சங்கர் தெரிவித்தார். அவர் உள்நோக்கத்துடன் பேசி வருகிறார் என்று தெரிந்தபோதும் தகுந்த ஆதாரம் அப்போது என்னிடம் இல்லை.

இந்த நிலையில் சவுக்கு சங்கரிடம் உதவியாளராக இருந்த பிரதீப் என்பவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சவுக்கு சங்கர் பணம் பெற்றுதான் இப்படி பேசினார் என்று கூறியுள்ளார். எனவே இதனை ஆதாரமாக வைத்து, சவுக்கு சங்கர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

இந்த புகார் மனுவை 'சைபர் கிரைம்' போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். இந்த புகார் தொடர்பாக சவுக்கு சங்கர் மீது விரைவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்