

ராதாபுரம்:
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின்திறன் கொண்ட 2 அணுஉலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. மேலும் 3, 4, 5, 6-க்கான அணுஉலைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் கூடங்குளம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து அப்பகுதியில் ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் விதத்தில் அவர்களுக்கு தொழில் மேம்பாட்டு திறன் சார்ந்த பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதில் தேர்வான முதல் 25 இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி தொடக்க விழா செட்டிகுளம் அனுவிஜய் நகரில் நேற்று நடந்தது.
சபாநாயகர் அப்பாவு, தொழிலாளர் துறை அமைச்சர் சி.வி.கணேசன், கலெக்டர் விஷ்ணு ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். இதில் பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு 28 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். இதில் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.
இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு கூறுகையில், 'கூடங்குளம் அணுமின் நிலையங்களுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு தொடர்பாக அணு உலைக்கு அடிக்கல் நாட்டும் போது கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் சி, டி பிரிவு வேலைவாய்ப்பு ஏற்படும்போது கூடங்குளம் சுற்றியுள்ள ராதாபுரம் தொகுதி மக்களுக்கு அந்த வேலையை வழங்க வேண்டும் என்று புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி 2011-ம் ஆண்டு வரை வேலைகள் வழங்கப்பட்டது. அதன்பின் வழங்கப்படவில்லை. எழுத்து தேர்வோ, நேர்முக தேர்வோ இல்லாமல் தகுதியின் அடிப்படையில் பணி வழங்க கூடங்குளம் நிர்வாக பணியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு தமிழக அரசு தொடர்ந்து தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறது என்றார். நிகழ்ச்சியில் ஞானதிரவியம் எம்.பி., கூடங்குளம் வளாக இயக்குனர் பிரேம்குமார், கூடங்குளம் அணுமின் நிலைய திட்ட இயக்குனர்கள் சுரேஷ், சின்னவீரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.