

ஐதராபாத்,
இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை அதி தீவிரமடைந்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,59,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,53,21,089 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், தொற்று பாதிப்பால் நாடு முழுவதும் ஒரே நாளில் 1,761 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,80,530 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,54,761 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,31,08,582 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 20,31,977 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தெலுங்கானா மாநிலத்திலும் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 5 ஆயிரத்து 926 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3.61 லட்சமாக அதிகரித்துள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 42 ஆயிரத்து 853 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைரஸ் தாக்குதலுக்கு அம்மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1,856 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் தெலுங்கானாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் (ஏப்ரல் 20) இம்மாத இறுதி வரை (ஏப்ரல் 30) இரவுநேர ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இரவு நேர ஊரடங்கு இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமல்படுத்தப்படுகிறது.
இரவு நேர ஊரடங்கின் போது அத்தியாவசிய தேவைகள் இன்று மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை.