

வாஷிங்டன்,
அமெரிக்காவை சேர்ந்த கன்டேஜியன் ஆராய்ச்சி மைய இயக்குனர்களில் ஒருவர் மற்றும் தலைமை அறிவியல் அதிகாரியான ஜோயெல் பிங்கள்ஸ்டீன் கூறும்போது, இந்துக்களுக்கு எதிராக ஆயிரம் சதவீதம் அளவில் வெறுப்புணர்வு வளர்ந்து உள்ளது.
இந்துக்களுக்கு எதிரான பகைமையை வளர்க்க கூடிய மீம்கள், பிற வடிவிலான கதைகள் மற்றும் வெள்ளையின ஆதிக்கவாதிகளின் வெறுப்புணர்வு, இஸ்லாமியர்கள் மற்றும் பிறரின் வெறுப்புகள் ஆகியவை பகைமைக்கான ஒரு நச்சான சுற்றுச்சூழலை உருவாக்கி உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.
இதற்கு சான்றாக, சமீபத்திய மாதங்களில் அமெரிக்கா மற்றும் கனடாவில் பல்வேறு இந்து கோவில்கள் சூறையாடப்பட்டு உள்ள நிகழ்வுகளை அவர் சுட்டி காட்டி பேசினார். இந்த தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் கூட, இங்கிலாந்தின் லீசெஸ்டர்ஷையரில் இந்து கோவில் மீது வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த 19-ந்தேதி நடந்த இந்த தாக்குதலின் தொடர்ச்சியாக, இங்கிலாந்தில் ஸ்மெத்விக் பகுதியில் இந்து கோவிலுக்கு வெளியே கும்பல் ஒன்று நேற்று போராட்டத்தில் ஈடுபட்டது. அவர்களில் பலர் கோவிலின் சுவர் பகுதியில் ஏறும் வீடியோ காட்சிகளும் வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்தின.