ரோஹிங்கியா அகதிகள் மியான்மர் திரும்ப ஐ.நா. நடவடிக்கை வேண்டும் - வங்கதேசம்

ரோஹிங்கியா அகதிகள் மியான்மர் திரும்ப ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வலியுறுத்தி உள்ளார்.

Update: 2022-08-18 08:09 GMT

டாக்கா,

மியான்மரில் கடந்த 2017 ஆம் ஆண்டு ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக நிகழ்ந்த ராணுவ அடக்குமுறையால், சுமார் 7,40,000 பேர் மியான்மரில் இருந்து வங்கதேசத்திற்கு இடம்பெயர்ந்தனர். வங்கதேசத்தில் ஏற்கனவே 2,00,000 ரோஹிங்கியாக்கள் அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் அனைவரும் காக்ஸ் பஜார் மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அகதிகள் முகாமில் தங்கள் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது எனவும், தாங்கள் விலங்குகளைப் போல் வாழ்ந்து வருவதாகவும் ரோஹிங்கியாக்கள் வேதனை தெரிவித்தனர்.

ரோஹிங்கியா அகதிகள் அனைவரையும் மியான்மருக்கு அனுப்ப வங்கதேச அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் அவர்களை திரும்ப ஏற்க மியான்மர் மறுத்து வருகிறது.

இந்த நிலையில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் மிச்செல்லி பாசெலெட் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு ரோஹிங்கியாக்கள் வசிக்கும் காக்ஸ் பஜார் பகுதியை நேரில் சென்று பார்வையிட்டார். இதனைதொடர்ந்து வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது, ரோஹிங்கியா அகதிகள் மியான்மர் திரும்ப ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஷேக் ஹசீனா வலியுறுத்தி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்