கடல் நீர்மட்டம் உயர்வால் சென்னை, கொல்கத்தா நகரங்களுக்கு பேராபத்து; புதிய ஆய்வறிக்கை தகவல்

பருவநிலை மாற்றங்களால் கடல் நீர்மட்டம் உயர்ந்து, சென்னை, கொல்கத்தா உள்பட ஆசிய நகரங்களுக்கு பேராபத்து காத்திருக்கிறது என புதிய ஆய்வறிக்கை அதிர்ச்சி தெரிவிக்கின்றது.

Update: 2023-03-05 09:27 GMT

வாஷிங்டன்,


உலகம் முழுவதும் பருவநிலை மாற்றங்கள், பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம் அதிகரிப்பு, உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் கடல்நீர் மட்டம் உயர்வு, சூறாவளி தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளும் அதிகரிக்க கூடும் என எச்சரிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி நேச்சர் கிளைமேட் சேஞ்ச் என்ற பத்திரிகையில் விஞ்ஞானிகளின் ஆய்வு அறிக்கை முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. தேசிய வளிமண்டல ஆய்வு மையத்தின் விஞ்ஞானியான ஐக்சூ ஹூ என்பவர் தலைமையில் நடந்த ஆய்வில், நடப்பு நூற்றாண்டில் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம் அதிக விகிதத்தில் உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால், 2100-ம் ஆண்டு காலகட்டத்தில் ஆசியாவின் பல பெரிய நகரங்கள் பேரிடரை எதிர்கொள்ளும் பேராபத்தில் உள்ளன என கண்டறியப்பட்டு உள்ளது.

இதன்படி, இந்தியாவின் இரு முக்கிய நகரங்களான சென்னை மற்றும் கொல்கத்தா, யாங்கூன், பேங்காக், ஹோ சி மின் சிட்டி மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரம் ஆகியவை பட்டியலிடப்பட்டு உள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஆய்வு அறிக்கை ஒன்றில் தமிழக பகுதிகளுக்கு ஏற்பட போகும் பேராபத்து பற்றி குறிப்பிடப்பட்டு இருந்தது. தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறையின் கீழ் பருவநிலை மாற்றம் தமிழக செயல்திட்டம் என்ற அமைப்பு செயல்படுகிறது.

பருவநிலை மற்றும் உலக வெப்பமயமாதல் ஆகியவற்றால் தமிழகத்திற்கு ஏற்படும் விளைவுகள் பற்றி நடந்த ஆய்வில், உலக வெப்பமயம் அதிகரிப்பினால், அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் அதிக அளவில் உருகி, அதனால் 2050-ல் கடல் மட்டம் 4.8 மீட்டர் அளவிற்கு உயரும் என்று தெரிய வந்துள்ளது. அதேபோல கிழக்கு அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி வருகின்றன. இதனால் கடல் நீர்மட்டம் 3.4 மீட்டர் உயரம் என்று கண்டுபிடித்துள்ளனர்.

இதன் காரணமாக உலகம் முழுவதுமே கடல் நீர்மட்டம் உயர்ந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால் தமிழகத்தில் என்ன பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வு செய்ததில் 2050-ம் ஆண்டில் தமிழக கடலோர பகுதியில் 4.35 மீட்டரில் இருந்து 6.85 மீட்டர் வரை நீர்மட்டம் உயரும் என்று தெரிய வந்துள்ளது. இதனால் சுமார் 1963 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு பகுதிகளை கடல் விழுங்கி விடும்.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் 144 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு கடற்பகுதிக்குள் சென்று விடும். இதனால் இந்த பகுதியில் வாழும் 10 லட்சம் மக்கள் வாழ்விடத்தை இழந்து வெளியேற வேண்டிய கட்டாய நிலை ஏற்படும். அதோடு காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் 5 லட்சம் பேர் வெளியேறும் நிலை உருவாகும்.

தமிழகத்தில் உள்நாட்டு உற்பத்தி விகிதம் கடந்த ஆண்டு கணக்கீட்டின்படி ரூ.12 லட்சத்து 12 ஆயிரம் கோடி ஆகும். நிலப்பரப்பை கடல் விழுங்குவதால் இதில் 50-ல் இருந்து 55 சதவீதம் வரை பாதிப்பு ஏற்படும் என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அது மட்டுமல்லாமல் கடல் மட்டம் உயருவதால் கடல் அரிப்பு இனி அதிகமாகும். இதனால் கடற்கரை பகுதி கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு வரும். மேலும், கடல் அலையின் சீற்றமும் அதிகரிக்கும். ராட்சத அலைகள் ஊருக்குள் புகும். சூறாவளி, புயல் காலத்தில் இதன் பாதிப்புகள் மோசமாக இருக்கும். கடல்நீர் நிலத்தடி நீருக்குள் புகுந்து உப்பு தண்ணீராக மாறும். இதுபோல இன்னும் பல பாதிப்புகள் ஏற்படும் என்று அந்த ஆய்வு அதிர்ச்சி தெரிவித்தது.

இந்த சூழலில் புதிய ஆய்வின்படி, கடல் நீர்மட்டம் உயர்வால் மேற்கத்திய வெப்பமண்டல பசிபிக் தீவுகள் மற்றும் மேற்கு இந்திய பெருங்கடல் பகுதிகளிலும் அது பாதிப்பு ஏற்படுத்த கூடும்.

சமுத்திரங்களின் வெப்ப நிலை உயரும்போது, அது சூடாகி, நீர் விரிவடைகிறது. பனி படலங்கள் உருக தொடங்கி அதிகளவிலான நீர் கடலில் கலக்கும். இதுபோக, கடல் நீரோட்டங்கள் மாறுபாட்டால், கடல் நீர்மட்ட உயர்வானது ஒவ்வொரு பகுதிக்கும் மாறுபடும்.

அதிகரித்து வரும் வெள்ள பெருக்கு சம்பவங்களால், பருவநிலை மாற்றத்தினால் மட்டுமே 20 முதல் 30 சதவீதம் வரை சில பகுதிகளில் இந்த கடல் நீர்மட்டம் உயர்வு ஏற்படும் பாதிப்பு உள்ளது.

எடுத்துக்காட்டாக, 2006-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, மணிலா நகரில் 2100-ம் ஆண்டில் வெள்ள பெருக்கு சம்பவங்கள் 18 முறை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகிறது.

இது பருவநிலை மாற்றம் ஒன்றையே அடிப்படையாக கொண்டது. ஆனால், பருவநிலை மாற்றம் மற்றும் உள்நாட்டு பருவகால மாற்றத்தினால், இந்த பாதிப்பு 96 மடங்கு அதிகரிக்கும் ஆபத்தும் உள்ளது என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

இதனால், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவின் மேற்கு கடலோர பகுதிகளிலும் அதன் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது.

பூமியின் பருவநிலை அமைப்பில் சிக்கலான மற்றும் முன்பே கணிக்க முடியாத நிகழ்வுகளால் கடல் நீர்மட்ட உயர்வு பற்றிய மதிப்பீடுகள் நிச்சயமற்ற நிலையில் உள்ளன என அறிக்கை தெரிவித்த போதிலும், ஆய்வாளர்கள் கூறும்போது, தீவிர கடல் நீர்மட்டம் உயர்வின் பேராற்றலை கவனத்தில் கொண்டு, மக்கள் பாதுகாப்பான பகுதிகளில் தங்களை தகவமைத்து கொள்வதற்கான செயல் திட்டங்களை வகுப்பதும் அவசியம் என தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்