சீனாவில் மக்கள் போராட்டம் தீவிரம்: கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த அரசு முடிவு!

சீனாவின் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகளால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Update: 2022-12-02 03:09 GMT

பீஜிங்,

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 36,061 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டது.

சீனாவின் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகளால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஜின்ஜியாங் மாகாணத்தில் உரும்கி நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்தில் ௧௦ பேர் உயிரிழந்தனர். கொரோனா கட்டுப்பாடுகளால்தான் அவர்கள் வெளியேற முடியாமல் உயிரிழந்ததாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.

இதனையடுத்து கடந்த மாதம் போராட்டத்தில் குதித்தனர். ஜின்ஜியாங் மாகாணத்தின் தலைநகர் உரும்கியில் தொடங்கிய இந்த போராட்டம் நாடு முழுவதும் பரவி தீவிரமடைந்தது.எனினும், போராட்டம் தீவிரமாக இருந்து வந்த அனைத்து நகரங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டதால் போராட்டம் முடங்கியது. இந்த நிலையில் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் தலைநகரான குவாங்சூ நகரில் கொேரானாகட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நூற்றுக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராடிய நிலையில் அவர்களை கலைக்க போலீசார் முற்பட்டபோது இருதரப்புக்கும் இடையில் மோதல் வெடித்தது.போராட்டக்காரர்கள் கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்டவற்றை போலீசார் மீது வீசி எறிந்தனர். அதை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தியதாகவும், பலர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த சீன அரசு முடிவு செய்துள்ளது. காங்சோ, ஷிஜியாஸ்ஹாங், செங்டு உட்பட பல முக்கிய நகரங்களில் கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டன.

வயதானவர்கள், வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள்,ஆன்லைன் கல்வியில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே வராத பிறருக்கு இப்போது தினசரி கொரோனா பரிசோதனைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் பணியாளர்கள், மருந்தாளுனர்கள், சுகாதாரம் மற்றும் விநியோகப் பணியாளர்கள் உள்ளிட்ட சில துறைகளில் உள்ளவர்களுக்கு மட்டுமே தினசரி கொரோனா பரிசோதனைகள் தேவைப்படுகின்றன. அதேபோல, தலைநகர் பீஜிங்கில் வசிக்கும் மக்கள் கபேக்கள், உணவகங்கள் மற்றும் வணிக வளாகங்கள் போன்ற பொது இடங்களுக்குள் நுழைய, கொரோனா பரிசோதனை கட்டாயம்.

இதனிடையே, கடந்த புதன்கிழமை காலமான, ஆளும் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஜியாங் இறுதிச் சடங்கு ஷாங்காய் நகரில் நடைபெற உள்ள நிலையில், போலீசார் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அரசு நடத்தும் கொரோனா கட்டுப்பாடு மையங்களுக்குப் பதிலாக அவரவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கலாம் என்று பீஜிங் மற்றும் குவாங்சோவில் உள்ள உள்ளூர் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்