"ஊழலற்றவர், வெளிநாடுகளில் சொத்துக்கள் இல்லை" பிரதமர் மோடியை பாராட்டிய இம்ரான் கான்...!

ஊழல் விவகாரத்திலும் சொத்துக்குவிப்பு விவகாரத்திலும் நவாஸ் ஷெரீப்பை விமர்சனம் செய்த முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்திய பிரதமர் மோடியை பாராட்டி உள்ளார்.

Update: 2022-09-22 11:23 GMT

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான், சில மாதங்களுக்கு முன்பு நடந்த நம்பிக்கையில்லா ஓட்டெடுப்பில் பிரதமர் பதவியை இழந்தார். இதையடுத்து புதிய பிரதமராக ஷபாஸ் செரீப் பொறுப்பேற்று கொண்டார்.

இவர் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான நவாஸ் செரீப்பின் சகோதரர் ஆவார். இந்த நிலையில் பாகிஸ்தானில் தற்போது பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்த நிலையில், சமீபத்தில் பெய்த பருவமழையால் வெள்ளத்தால் பெரும்பகுதி பாதிக்கப்பட்டது. இது நாட்டின் பொருளாதாரத்தில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியது. இதைனையடுத்து இம்ரான் கான், ஷபாஸ் ஷெரீப் அரசை விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் இம்ரான் கான் வெளியிட்ட வீடியோவில் கூறி இருப்பதாவது:-

பாகிஸ்தானில் இருந்து வெளியேறி வெளிநாட்டில் உள்ள ஷபாஸ் ஷெரீப்பின் சகோதரர் நவாஸ் ஷெரீப்பிற்கு வெளிநாடுகளில் ஏராளமான சொத்துகள் உள்ளன. இந்த சொத்துகளின் மதிப்பு பல மில்லியன் ஆகும். இந்த சொத்துகளின் அளவை யாராலும் கணக்கிட முடியாது.

உலகில் வேறு எந்த அரசியல் தலைவருக்கும் இந்த அளவுக்கு வெளிநாடுகளில் சொத்துக்கள் இல்லை. நமது அண்டை நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிக்கு வெளிநாடுகளில் எவ்வளவு சொத்துக்கள் உள்ளன என்று கூட பாருங்கள். நவாஸ் செரீப் வைத்திருக்கும் கோடிக்கணக்கான சொத்துக்கள் பற்றி யாரும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது இவ்வாறு அவர் கூறினார்.

இம்ரான் கான் முன்பும் இந்தியாவையும் இந்திய மக்களையும் பாராட்டியுள்ளார். இந்தியர்கள் சுயமரியாதை மிக்கவர்கள், இந்தியாவை எந்த சூப்பர் பவரும் ஆதிக்கம் செலுத்த முடியாது" என்று இம்ரான் கூறியுள்ளார்.

மேலும் இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்திரத்தை சேர்ந்துதான் பெற்றனர், ஆனால் பாகிஸ்தானை சூப்பர் பவர்கள் டிஸ்யூ பேப்பர் போல் பயன்படுத்தித் தூக்கி எறிகின்றனர் என கூறி இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்