தென்ஆப்பிரிக்காவில் கியாஸ் டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு

தென்ஆப்பிரிக்காவில் ஆஸ்பத்திரி அருகே கியாஸ் டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் 15 பேர் உடல் கருகி பலியாகினர்.
தென்ஆப்பிரிக்காவில் கியாஸ் டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு
Published on

ஜோகன்னஸ்பர்க்,

அரசு ஆஸ்பத்திரி அருகில்...

தென்ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரமான ஜோகன்னஸ்பர்க்கின் கிழக்கு பகுதியில் உள்ள போக்ஸ்பர்க் நகரில் அரசு ஆஸ்பத்திரி ஒன்று உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் மேம்பாலம் உள்ளது.

நேற்று முன்தினம் காலை திரவ பெட்ரோலிய எரிவாயு (கியாஸ்) ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று, எதிர்பாராத விதமாக இந்த மேம்பாலத்தின் அடியில் சிக்கிக்கொண்டது.

இதையடுத்து, லாரியின் டிரைவர் மேம்பாலத்தின் அடியில் இருந்து லாரியை நகர்த்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் டேங்கர் லாரி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

வானுயரத்துக்கு தீப்பிழம்பு

சக்தி வாய்ந்த குண்டு வெடித்து போல் அந்த பகுதியே அதிர்ந்தது. வானுயரத்துக்கு தீப்பிழம்பு எழுந்தது. கியாஸ் டேங்கர் வெடித்து சிதறியதின் அதிர்வால் மேம்பாலம் அருகே இருந்த பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அந்த வகையில் அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

இதில் நோயாளிகள், மருத்துவ ஊழியர்கள் என பலரும் இடிபாடுகள் சிக்கினர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டனர். இதையடுத்து அந்த ஆஸ்பத்திரியில் இருந்த நோயாளிகள் உள்பட அனைவரும் அவசரஅவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

மீண்டும் பயங்கர வெடிப்பு

இதற்கிடையில் கியாஸ் டேங்கர் வெடித்து சிதறிய தகவல் கிடைத்ததும் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மீண்டும் பயங்கர வெடிப்பு ஏற்பட்டது. இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட பல வாகனங்கள் தீக்கிரையாகின. தீயணைப்பு வீரர்கள் சிலரும் தீயில் சிக்கினர்.

15 பேர் பரிதாப சாவு

இந்த கோர விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். மேலும் சுமார் 35 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே பாலத்துக்கு அடியில் கியாஸ் டேங்கர் லாரி சிக்கி வெடித்து சிதறிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com