சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு சிறை

சிங்கப்பூரில் முன்னாள் காதலியின் வருங்கால கணவர் வீட்டுக்கு தீ வைத்ததாக இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது

Update: 2022-12-10 21:26 GMT

சிங்கப்பூர்,

சிங்கப்பூரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் சுரேந்திரன் சுகுமாரன். 30 வயதான இவர் சிங்கப்பூரை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் இன்ஸ்டாகிராம் பதிவு மூலமாக தனது முன்னாள் காதலிக்கு முகமது என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதை சுரேந்திரன் அறிந்தார். இதனால் கோபமடைந்த சுரேந்திரன் தனது முன்னாள் காதலியின் வருங்கால கணவரின் முகவரியை தேடி கண்டு பிடித்தார்.

பின்னர் முகமது வீட்டுக்கு சென்ற சுரேந்திரன் பூட்டி வீட்டுக்கு தீ வைத்துவிட்டு தப்பி ஓடினார். அப்போது வீட்டுக்குள் முகமது இருந்தார். எனினும் இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக சுரேந்திரன் மீது வழக்கு தொடரப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று இறுதி விசாரணை நடந்தது. இதில் சுரேந்திரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவரை குற்றவாளியாக அறிவித்த நீதிபதி அவருக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்