ஈரான்: ஹிஜாப் அணியாமல் உணவு விடுதியில் சாப்பிட்ட பெண் கைது

ஈரானில் பொது வெளியில் ஹிஜாப் அணியாமல் உணவு விடுதியில் சாப்பிட்ட பெண்ணை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

Update: 2022-10-01 11:55 GMT



தெஹ்ரான்,


ஈரான் நாட்டில் உள்ள உணவு விடுதி ஒன்றில் தொன்யா ராட் என்ற பெண், மற்றொரு பெண் என இரண்டு பேர் உணவு விடுதி ஒன்றில் ஹிஜாப் அணியாமல் காலை சிற்றுண்டி சாப்பிட்டு உள்ளனர். இதுபற்றிய புகைப்படம் ஒன்று ஆன்லைனில் வெளியானது.

ஈரானில் இதுபோன்ற கபே மற்றும் காபி கடைகளில் பெருமளவில் ஆண்களே அதிகளவில் வாடிக்கையாளராக செல்வதுண்டு. இந்நிலையில், தொன்யாவின் சகோதரி கூறும்போது, பாதுகாப்பு அதிகாரிகள் தொன்யாவை நெருங்கி, அவரது செயலுக்கு விளக்கம் கேட்டுள்ளனர்.

சரியான பதில் வராத சூழலில், தொன்யாவை படையினர் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அவரை எவின் சிறையில் அறை எண் 209-ல் அடைத்து உள்ளனர் என அவர் கூறியுள்ளார்.

இந்த எவின் சிறையானது அரசியில் கைதிகள் அடைக்கப்படும், கொடூர மற்றும் குறைவான வசதிகளை கொண்டது. ஈரானின் உளவு அமைச்சகத்தினரால் நிர்வகிக்கப்படும் கைதிகளுக்காகவே இந்த சிறை வடிவமைக்கப்பட்டது.

சமீப நாட்களாக ஈரானில் பிரபலம் வாய்ந்த பலரை பாதுகாப்பு படையினர் கைது செய்து வருகின்றனர். கவிஞர் மோனா போர்ஜோயி, ஈரான் கால்பந்து வீரர் உசைன் மகினி முன்னாள் ஈரான் அதிபர் அலி அக்பரின் மகள் ஆகியோர் கைது செய்யப்பட்ட நபர்கள் ஆவர்.

இந்த வாரம் பிரபல ஈரானிய பாடகி ஷெர்வின் ஹாஜிபுர் என்பவரும் கைது செய்யப்பட்டார். ஈரானில் 22 வயது மாஷா அமினி என்ற இளம்பெண் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி கடந்த 13-ந்தேதி போலீசார் கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தார். இதனை கண்டித்து ஈரானில் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர்.

அமினியின் சொந்த ஊரான சஹிஸ் நகரில் தொடங்கிய போராட்டம் மெல்ல மெல்ல நாட்டின் பிற பகுதிகளிலும் பரவ தொடங்கியது. ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்கைப், பேஸ்புக், டுவிட்டர், டிக்-டாக் மற்றும் டெலிகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டு இணையதள சேவை தடை செய்யப்பட்டுள்ளது. ஈரானில் ஹிஜாப்பிற்கு எதிராக போராட்டம் நடத்திய நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், சீர்திருத்த ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2 வாரமாக நீடிக்கும் போராட்டத்தில் குறைந்தது 83 பேர் இறந்துள்ளனர், அதில் பெரும்பாலானோர் போராட்டக்காரர்கள் என்றும், போராட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம் என்றும் மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்