இஸ்ரேல் ராணுவம் திடீர் தாக்குதல்: 11 பாலஸ்தீனியர்கள் பலி; 100 பேர் காயம்

இஸ்ரேல் ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் 11 பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர்.

Update: 2023-02-23 06:44 GMT



ஜெருசலேம்,


இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையே நீண்டகாலம் ஆக மோதல் போக்கு காணப்படுகிறது. இதில், இரு தரப்பிலும் படைகள் மோதி கொள்கின்றன. இந்நிலையில், இஸ்ரேல் படை திடீரென பகல் பொழுதில் மேற்கு கரை பகுதியில் தாக்குதல் நடத்தி உள்ளது.

இதுபற்றி இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு கழகம் இணைந்து கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், இஸ்ரேல் மீது சந்தேகத்திற்குரிய 3 நபர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தனர். அவர்கள் 3 பேரும், நாப்லஸ் பகுதியில் நடந்த அதிரடி நடவடிக்கையில் சுட்டு வீழ்த்தப்பட்டனர் என தெரிவித்து உள்ளது.

இதுபற்றி சி.என்.என். வெளியிட்டு உள்ள தகவலில், இஸ்ரேலிய படைகளுடனான மோதலில் தங்களது 2 தளபதிகள் கொல்லப்பட்டனர் என இஸ்லாமிய ஜிகாத் பயங்கரவாத குழு தெரிவித்து உள்ளது.

இந்த மோதலில், எங்களது உறுப்பினர்களும் ஈடுபட்டு உள்ளனர் என லையன்ஸ் டென் என்ற பயங்கரவாத குழு உறுதி செய்து உள்ளது. எனினும், அவர்களில் உயிரிழப்பு பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

ஹமாஸ் உறுப்பினர் ஹுசம் சலீம் என்பவர் கொல்லப்பட்டு உள்ளார் என பாலஸ்தீனிய பயங்கரவாத குழு தெரிவித்து உள்ளது.

இவர்களில் லையன்ஸ் டென் என்ற பயங்கரவாத குழுவை சேர்ந்த சலீம் என்ற மூத்த உறுப்பினர், கடந்த ஆண்டு அக்டோபரில், இஸ்ரேல் படையினர் மீது தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் என தகவல் தெரிவிக்கின்றது. தாக்குதலுக்கு பின்னர் அந்த அமைப்பு அதற்கு பொறுப்பேற்று கொண்டது.

இந்த மோதலின்போது, சந்தேகத்திற்குரிய நபர்கள் பெரிய கற்கள் மற்றும் மதுபான பாட்டில்களை கொண்டு வீசியும் மற்றும் வெடிபொருட்களை வெடிக்க செய்தும் பதில் தாக்குதல் நடத்தினர் என இஸ்ரேலிய படை தெரிவித்தது.

இந்த மோதலில், 11 பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். 102 பேர் காயம் அடைந்து உள்ளனர். அவர்களில் 7 பேர் தீவிர சிகிச்சை பெறும் நிலையில் உள்ளனர் என பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 6 பேர் 20 வயது உடையவர்கள். மற்றொருவர் 16 வயதும், 33, 61 மற்றும் 72 வயது உடைய நபர்களும் கொல்லப்பட்டு உள்ளனர். அனைவரும் ஆண்கள் என பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட பட்டியல் தெரிவிக்கின்றது.

இந்த தாக்குதலால், இந்த ஆண்டில் இதுவரை இஸ்ரேல் படையால் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்து உள்ளது. நடப்பு ஆண்டில் பாலஸ்தீனியர்கள் நடத்திய தாக்குதலில் 11 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்