துப்பாக்கிச்சூடு தொடர்பாக தவறான தகவல்; வானொலி தொகுப்பாளர் ரூ.8 ஆயிரம் கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

சாண்டி ஹூக் தொடக்கப்பள்ளி துப்பாக்கிச்சூடு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அலெக்ஸ் ஜோன்ஸ் ரூ.8 ஆயிரம் கோடி இழப்பீடு தருமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Update: 2022-10-13 16:55 GMT

அமெரிக்காவில் கனெக்டிகட் மாகாணத்தின் நியூடவுன் நகரில் உள்ள சாண்டி ஹூக் தொடக்கப்பள்ளியில் 2012-ம் ஆண்டு டிசம்பர் 14-ந்தேதி ஆதம் லான்சா என்ற கொலைகாரன் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவம், அந்த நாட்டையே உலுக்கியது. இதில் 20 குழந்தைகள் உள்பட 26 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். முன்னதாக அந்த கொலைகாரன் தனது தாயாரையும் சுட்டுக்கொன்று விட்டான். இத்தனை கொடூரங்களை அரங்கேற்றிய அவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலையும் செய்து கொண்டான்.

இந்த நிலையில், அந்த நாட்டின் வானொலி தொகுப்பாளரும், சதி கோட்பாட்டாளருமான அலெக்ஸ் ஜோன்ஸ், சாண்டி ஹூக் தொடக்கப்பள்ளி துப்பாக்கிச்சூடு முற்றிலும் போலியானது, இது மாபெரும் புரளி என கூறி, பாதிக்கப்பட்டவர்களின் வெந்த புண்களில் வேலைப்பாய்ச்சினார்.

இதன் காரணமாக, அந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் கொல்லப்பட்ட 8 பேரின் குடும்பத்தினரும், இந்த தாக்குதலை அறிந்து அங்கு விரைந்து நடவடிக்கை எடுத்த மத்திய புலனாய்வு அமைப்பு எப்.பி.ஐ.யின் ஏஜெண்டு ஒருவரும் அலெக்ஸ் ஜோன்சிடம் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர். அவரது தவறான தகவல், ஒரு 10 ஆண்டு கால துன்புறுத்தலுக்கும், மரண அச்சுறுத்தலுக்கும் வழிவகுத்ததாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

சதித்திட்டம் நிறைந்த இன்போவார்ஸ் இணைய தளம் மற்றும் 'டாக் ஷோ' நிகழ்ச்சிகளை நடத்தி வந்த அலெக்ஸ் ஜோன்ஸ், இந்த படுகொலை அமெரிக்கர்களிடம் இருந்து துப்பாக்கிகளை பறிப்பதற்கு அரசு செய்த சதி என்றும் யாரும் கொல்லப்படவில்லை என்றும் பல்லாண்டு காலம் வாதிட்டார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம்தான் அவர் நடந்த கொடிய சம்பவத்தை வழக்கு விசாரணையின்போது ஒப்புக்கொண்டார். இந்தநிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அலெக்ஸ் ஜோன்ஸ் 956 மில்லியன் டாலர் (சுமார் ரூ.8 ஆயிரம் கோடி) இழப்பீடு தருமாறு நேற்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த தீர்ப்பு அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்