கென்யாவில் 40 ஆண்டுகள் இல்லாத அளவு கடுமையான வறட்சி - வனவிலங்குகளை காப்பாற்ற போராடும் அரசு

கென்யாவில் நிலவி வரும் வறட்சி அந்நாட்டின் வன உயிரியல் சூழலை மிகக் கடுமையாக பாதித்துள்ளது.

Update: 2022-11-06 14:37 GMT

நைரோபி,

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வறட்சி நிலவி வருகிறது. கிழக்கு ஆப்பிரிக்காவில் 4 முறை தொடர்ச்சியாக மழைக்காலம் பொய்த்துப் போனதே இதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இது அந்நாட்டின் வன உயிரியல் சூழலை மிகக் கடுமையாக பாதித்துள்ளது.

சுற்றுலாவிற்கும், ஆப்பிரிக்க காட்டு யானைகளுக்கும் பெயர் பெற்ற கென்யாவில், தற்போது கடும் வறட்சியின் காரணமாக வனவிலங்குகள் நீரின்றி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தாவரங்களை உண்டு வாழும் விலங்குகளான யானைகள், வரிக்குதிரைகள், ஒட்டகச் சிவிங்கிகள், காட்டெருமைகள் உள்ளிட்ட 14 வகையான வன உயிரினங்கள் அதிக அளவில் உயிரிழந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம் மக்கள் வளர்த்த கால்நடைகள் உணவு, நீர் இன்றி உயிரிழப்பதை காணமுடியாது அவற்றை மிகக்குறைந்த விலைக்கு விற்றுவிடும் அவலமும் அங்கு நிலவி வருகிறது. வறட்சியில் இருந்து விலங்கினங்களை காப்பதற்காக கென்யா அரசு கடுமையாக போராடி வருகிறது. அந்நாட்டில் நிலவும் சூழலை 'ஒரு பேரழிவு' என விவரிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், புவி வெப்பமயமாதலை தடுக்க உலக அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்