பெரு நாட்டின் அதிபர் பெட்ரோ அதிரடி நீக்கம்: முதல் பெண் அதிபராக டினா பதவி ஏற்பு

பெருநாட்டின் அதிபர் பெட்ரோ காஸ்டிலோ நீக்கப்பட்டார். அந்த நாட்டின் முதல் பெண் அதிபராக டினா பதவி ஏற்றார்.

Update: 2022-12-08 23:38 GMT

லிமா,

தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் நிலையற்ற தன்மை நிலவி வந்தது. 2020-ம் ஆண்டில் அந்த நாடு 5 நாளில் 3 அதிபர்களைக் கண்டது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம், பள்ளி ஆசிரியராக வாழ்வைத் தொடங்கிய இடதுசாரியான பெட்ரோ காஸ்டிலோ, வலதுசாரியான கெய்கோவை வீழ்த்தி அதிபர் ஆனார்.

அவர் மீது சமீப காலமாக ஊழல் குற்றச்சாட்டுகள் வலுத்து வந்தன. ஆனால் அவை தன்னை பதவியில் இருந்து நீக்குவதற்கான சதித்திட்டத்தின் ஒரு பகுதி என கூறி அவர் நிராகரித்தார்.

அவசர நிலையை அறிவித்த அதிபர்

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அதிரடியாக அதிபர் பெட்ரோ காஸ்டிலோ, அந்த நாட்டின் டெலிவிஷனில் தோன்றிப் பேசினார். நாட்டில் அவர் அவசர நிலையை அமல்படுத்துவதாக அறிவித்தார். நாடாளுமன்றம் கலைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, நாட்டு மக்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்கிற வகையில் அங்கு சட்டம் மற்றும் ஜனநாயகத்தின் ஆட்சியை மீண்டும் ஏற்டுத்தும் நோக்கத்தில் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த அரசை ஏற்படுத்தப்போவதாகவும் அறிவித்தார். இது அங்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த முடிவை எதிர்த்து மந்திரிகள் பலரும் பதவியை ராஜினாமா செய்தனர்.

'இம்பீச்மெண்ட' நடவடிக்கையால் பதவி இழப்பு

அந்த நாட்டின் அரசியல் சாசன கோர்ட்டு, அவர் ஆட்சிக்கவிழ்ப்பைத் தொடங்கி உள்ளதாக குற்றம் சாட்டியது. அவர் தனது முடிவைத் திரும்பப்பெற வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது. அதிபரின் முடிவை எம்.பி.க்கள் நிராகரித்தனர்.

ஆனால் எதிர்க்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த நாட்டின் நாடாளுமன்றம் அவசரமாகக்கூடி அவருக்கு எதிராக 'இம்பீச்மெண்ட்' நடவடிக்கை எடுத்தது. அவரது பதவியைப் பறிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்துக்கு ஆதரவாக 101 ஓட்டுகள் விழுந்தன. எதிராக 6 வாக்குகள் கிடைத்தன. 10 பேர் ஓட்டெடுப்பை புறக்கணித்தனர். 'இம்பீச்மெண்ட்' நடவடிக்கைக்கு ஆதரவாக பெரும்பான்மையான எம்.பி.க்கள் ஓட்டு போட்டதால் அதிபர் பதவி இழந்தார்.

அடுத்த சில நிமிடங்களில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் கிளர்ச்சியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதிபரானார், துணை அதிபர்

அதிபர் பதவி பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து துணை அதிபராக இருந்து வந்த பெண் தலைவர் டினா பொலுவார்டே அதிபர் பதவி ஏற்றார்.

60 வயதான இவர் வக்கீல் ஆவார். அவர் 2026-ம் ஆண்டு வரை அதிபர் பதவி வகிக்கப்போவதாக தெரிவித்தார். அப்போதுதான் முந்தைய அதிபர் பெட்ரோ காஸ்டிலோ பதவிக்காலம் முடிய இருந்தது.

பதவி ஏற்ற பின்னர் அதிபர் டினா பேசும்போது, நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்க அரசியல் சண்டை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தார். அப்போது அவர், "நான் கேட்பது ஒரு இடம். நாட்டை மீட்பதற்கான நேரம் தர வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

போலீஸ், படைகள் கூட்டறிக்கை

பெரு நாட்டின் போலீஸ் துறையும், ஆயுதப்படைகளும் ஒரு கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கையில், அரசியல் அமைப்பின் ஒழுங்கினை தாங்கள் மதிப்பதாக தெரிவித்துள்ளன.

பெருநாட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த திருப்பங்கள், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

Tags:    
Show comments

மேலும் செய்திகள்