சுவீடனில் 2 ஆசிரியைகளை கோடாரியால் தாக்கி கொலை செய்த மாணவனுக்கு ஆயுள் தண்டனை

சுவீடனில் 2 ஆசிரியைகளை கத்தி, கோடாரியால் தாக்கி கொலை செய்த மாணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-09-09 23:33 GMT

ஸ்டாக்ஹோம்:

சுவீடன் நாட்டில் மால்மோ நகரில் உள்ள லத்தீன் கலைப் பள்ளிக்கூடத்தில் கடந்த மார்ச் மாதம் 18 வயது மதிக்கத்தக்க ஒரு மாணவன், 2 ஆசிரியைகளை கத்தியாலும், கோடாரியாலும் கொடூரமாக தாக்கி படுகொலை செய்தான்.

இந்தக் கொலைக்கான காரணம் தெரியவரவில்லை. இருப்பினும் இந்த சம்பவம், அந்த நாட்டை அதிர வைத்தது. அப்போது 50 மாணவர்கள் தங்களை வகுப்பறைகளில் பூட்டிக்கொண்டனர்.

பாபியன் செடர்ஹோம் என்ற அந்த மாணவன் கைது செய்யப்பட்டு அவன் மீது அங்குள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அவன் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. இதனால் அவனுக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதித்து அங்குள்ள கோர்ட்டு நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தது.

தீர்ப்பில், "இந்தக் கொலைகள் இரண்டும் மிகக்கொடூரமானவை. அங்கு பாதிக்கப்பட்டவர்கள், மிகப்பெரிய அளவில் துன்பப்பட்டனர். மரண பீதியை அனுபவித்தனர்" என நீதிபதி ஜோஹன் கவர்ட் கூறி உள்ளார். இந்த நாட்டில் ஆயுள் சிறைத்தண்டனை என்பது குறைந்தது 20 முதல் 25 ஆண்டுகள் ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்