கொரோனா பரவல் தீவிரம் எதிரொலி; சீன அதிகாரிகளை அழைத்து உலக சுகாதார நிறுவனம் அவசர ஆலோசனை

சீனாவில் கொரோனா பரவல் தீவிரமாகி வருவதால், அந்த நாட்டின் அதிகாரிகளை அழைத்து உலக சுகாதார நிறுவனம் அவசர ஆலோசனை நடத்தியது. அனைத்து தகவல்களையும் தொடர்ந்து தர அறிவுறுத்தி உள்ளது.

Update: 2022-12-31 16:45 GMT

சீனாவில் கொரோனா பரவல் தீவிரம்

சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று இந்த பூமிப்பந்தையே உருட்டிப்போட்டு விட்டது. ஆனால் சீனா ஆரம்பத்திலேயே விழித்துக்கொண்டு பொதுமுடக்கம் உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியது.

இதனால் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட அந்த நாட்டில் கொரோனா கட்டுக்குள் இருந்தது. உலகமே பெரும் உயிரிழப்புகளை சந்தித்தாலும், சீனாவில் இறப்புகளும் கட்டுக்குள் இருந்தன.

2020, 2021 ஆகிய 2 ஆண்டுகள் உலகுக்கு அக்னி பரீட்சையாக அமைந்தது.

உலகமே கொரோனாவை கட்டுப்படுத்தி விட்ட நிலையில், சீனாவில் 'ஜீரோ கோவிட் பாலிசி' என்ற பெயரில் தொடர்ந்து கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது, மக்களின் எதிர்ப்புக்கு வழிவகுத்தது. மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்கள் நடத்தி, கட்டுப்பாடுகளை தளர்த்த அரசுக்கு அழுத்தம் தந்தனர்.

அதன்பேரில் ஒரே நாளில் கட்டுப்பாடுகளை சீனா தகர்த்தெறிந்தது. திரளான மக்களுக்கு பரிசோதனை நடத்துவது நிறுத்தப்பட்டது. தனிமைப்படுத்துவது நின்றது. வெளிநாடுகளுக்கு மக்கள் செல்ல வசதியாக மீண்டும் பாஸ்போர்ட் வழங்கலை தொடங்க உள்ளது.

ஆனால் இப்படி கட்டுப்பாடுகளை தளர்த்தியதைத் தொடர்ந்து அங்கு கொரோனா ஆவேச வெறி கொண்டு தாக்கி வருகிறது. அதுவும் 'பிஎப்.7' என்ற உருமாறிய கொரோனா ருத்ர தாண்டவமாடி வருகிறது.

உலக நாடுகள் அதிர்ச்சி

இதனால் ஏற்பட்டுவரும் உண்மையான பாதிப்புகளை சீன அரசு வெளியிடுவதில்லை என்ற புகார் சர்வதேச அரங்கில் எழுந்துள்ளது. தற்போது அந்த நாட்டில் தினமும் 10 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்படுவதாகவும், சுமார் 10 ஆயிரம் பேர் தினமும் தொற்றுக்கு பலியாவதாகவும் ஆய்வுத்தகவல்கள் வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளன.

உலக சுகாதார நிறுவனம் அவசர ஆலோசனை

இந்த நிலையிலும் உலக நாடுகள் உஷாராகிற வகையில், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விடுகிற வகையில் கொரோனா பரவல் குறித்த தகவல்களை சீனா பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் ஓங்கிக்குரல் கொடுத்துள்ளது.

இதையொட்டி சீன தேசிய சுகாதார கமிஷன் மற்றும் தேசிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிர்வாகத்தின் அதிகாரிகளை அழைத்து உலக சுகாதார நிறுவனம் அவசர ஆலோசனை நடத்தியது.

தரவுகளை தொடர்ந்து தர அறிவுறுத்தல்

இதையொட்டி உலக சுகாதார நிறுவனம் முன்தினம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறி உள்ள முக்கிய அம்சங்கள்:-

* சீனாவில் கொரோனா உறுதியாகிறவர்களுக்கு மரபணு வரிசைப்படுத்தல் சோதனை நடத்துவதை வலுப்படுத்த வேண்டும்.

* கொரோனா மருத்துவ மேலாண்மை, பாதிப்பு மதிப்பீடு ஆகியவற்றையும் வலுப்படுத்த வேண்டும். அதில் உலக சுகாதார நிறுவனம், சீனாவுக்கு உதவ தயாராக இருக்கிறது.

* கொரோனா தடுப்பூசிக்கு எதிரான தயக்கத்தை சந்திப்பதற்கு தடுப்பூசி பற்றிய தகவல்களை தெரிவிக்க வேண்டும்.

* சீன விஞ்ஞானிகள், உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையில் இணைந்து செயல்பட அழைக்கப்படுகிறார்கள்.

* கொரோனா நேர்மறை மாதிரிகளை மரபணு வரிசைப்படுத்தல் சோதனைக்கு அனுப்பி வைப்பது தொடர்பான விரிவான தரவுகளை சீன விஞ்ஞானிகள் தர வேண்டும்.

* கொரோனா பாதிப்பு, மரபணு வரிசைப்படுத்தல், ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் சேர்க்கை, தீவிர சிகிச்சைப்பிரிவில் நோயாளிகள் அனுமதி, இறப்பு விவரங்கள், தடுப்பூசி தகவல்கள் அனைத்தையும் சீனா தொடர்ந்து பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்