உலக அரசு உச்சி மாநாடு துபாயில் நாளை தொடங்குகிறது

20 நாடுகளின் அதிபர்கள்-150 நாடுகளின் மந்திரிகள் பங்கேற்கும் உலக அரசு உச்சி மாநாடு துபாயில் நாளை தொடங்குகிறது.
உலக அரசு உச்சி மாநாடு துபாயில் நாளை தொடங்குகிறது
Published on

உலக அரசு உச்சி மாநாடு

இதுகுறித்து அமீரக அமைச்சரவை விவகாரத்துறையின் மந்திரியும், உலக அரசு உச்சி மாநாட்டின் தலைவருமான முகம்மது பின் அப்துல்லா அல் கெர்காவி கூறியதாவது:-

துபாயின் ஜுமைரா பகுதியில் உள்ள மதினத் ஜுமைரா நட்சத்திர ஓட்டலில் உலக அரசு உச்சி மாநாடு நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு 15-ந் தேதி வரை நடக்கிறது. அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் திட்டத்தின் அடிப்படையில் மாநாடு நடத்தப்படுகிறது.

'எதிர்கால அரசை வடிவமைப்போம்' என்ற கருப்பொருளில் நடக்கும் மாநாட்டில் 20 நாடுகளின் அதிபர்கள் பங்கேற்கின்றனர்.

குறிப்பாக எகிப்து நாட்டின் அதிபர் அப்தெல் பத்தா எல் சிசி, செனகல் நாட்டின் அதிபர் மக்கி சால், பராகுவே நாட்டின் அதிபர் மரியோ அப்தோ பெனிடெஸ், அசர்பைசான் நாட்டின் அதிபர் இல்கம் அலியெவ், மொரிசியஸ் நாட்டின் அதிபர் பிரித்விராஜ்சிங் ரூபன் உள்ளிட்ட 20 நாடுகளின் அதிபர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகிறார்கள்.

ஐ.நா.பொது செயலாளர்

மேலும் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதமர்கள், 150 நாடுகளை சேர்ந்த 250 மந்திரிகள், 10 ஆயிரத்துக்கும் அதிகமான அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர், உலக வங்கியின் தலைவர் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் நிர்வாகிகளும் பங்கேற்று உரை ஆற்றுகிறார்கள்.

இந்த மாநாட்டில் 'ராசல் கைமா கடந்த காலத்தில், நிகழ்காலத்தில் மற்றும் எதிர்காலத்தில்' என்ற தலைப்பிலான சிறப்பு கருத்தரங்கம் நடக்கிறது. இதில் ராசல் கைமா ஆட்சியாளர் மேதகு ஷேக் சவுத் பின் சகர் அல் காசிமி பங்கேற்று சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.

`ஆப்பிரிக்கா உலகின் அடுத்த பொருளாதார வடிவம்' என்ற தலைப்பிலும் சிறப்பு கருத்தரங்கு நடத்தப்பட இருக்கிறது.

80 ஒப்பந்தங்கள்

அமீரக துணை பிரதமரும், உள்துறை மந்திரியுமான மேதகு ஷேக் சைப் பின் ஜாயித் அல் நஹ்யான் உள்ளிட்ட அமீரக மந்திரிகளும் பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்று உரை ஆற்றுகிறார்கள்.

220-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் 300-க்கும் மேற்பட்ட சர்வதேச தலைவர்கள் உரைகளை வழங்க இருப்பதால் மாநாட்டில் பங்கேற்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டில் தொடங்கிய இந்த மாநாட்டின் விளைவாக 'உலக எதிர்கால அருங்காட்சியகம்' செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு நாடுகளுக்கு இடையே 80 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com