ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய இளம்பெண் சுட்டுக்கொலை - லண்டனில் தூதரகம் முற்றுகை!

ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என போலீசார் தாக்கியதில் இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து பெண்கள் போராட்டத்தில் குதித்தனர்.

Update: 2022-09-26 09:32 GMT

தெஹ்ரான்,

ஈரான் நாட்டில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என போலீசார் தாக்கியதில் இளம்பெண் மாஷா உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் ஈரானின் கராஜ் நகரில் போராட்டத்தில் பங்கேற்ற ஹதிஷ் நஜிபி என்ற 20 வயது இளம்பெண் பாதுகாப்பு படை போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானார். போலீசார் துப்பக்கியால் சுட்டத்தில் அவரது முகம், நெஞ்சு உள்ளிட்ட இடங்களில் குண்டு பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதனால் ஈரானில் மேலும் பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது.

ஈரான் பெண்களுக்கு ஆதரவாக கனடா உள்ளிட்ட நாடுகளில் போராட்டம் நடந்து வருகிறது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஈரான் தூதரகம் முன்பு ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டம் நடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், ஈரான் ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகளிலும் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ள நிலையில் தங்கள் நாட்டில் நடந்து வரும் போராட்டத்தில் வெளிநாட்டு சதி இருப்பதாக ஈரான் குற்றஞ்சாட்டி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்