பயிற்சியாளர் வெட்டோரி எடுத்த அந்த முடிவுதான் வெற்றிக்கு காரணமாக அமைந்தது - பேட் கம்மின்ஸ்

இறுதிப்போட்டிக்கு செல்வது எங்கள் இலக்காக இருந்தது அதை செய்திருக்கிறோம் என பேட் கம்மின்ஸ் கூறினார்.

Update: 2024-05-25 03:42 GMT

Image Courtesy: AFP 

சென்னை,

சென்னையில் நேற்று நடைபெற்ற 2வது தகுதிசுற்று ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் கிளாசென் 50 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் பவுல்ட், அவேஷ் கான் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 176 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணி ஐதராபாத்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 20 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 36 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின்னர் ஐதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது, அணி வீரர்கள் எல்லா நேரத்திலும் சிறப்பாக இருந்தார்கள். எங்கள் அணிக்குள் ஒரு நல்ல அதிர்வு இருப்பதை நீங்கள் பார்க்க முடியும். இறுதிப்போட்டிக்கு செல்வது எங்கள் இலக்காக இருந்தது அதை செய்திருக்கிறோம்.

எங்கள் பலம் எங்கள் பேட்டிங் என்பதை அறிந்தோம். மேலும் எங்களுக்கு இருக்கும் அனுபவத்தை குறைத்து மதிப்பிட மாட்டோம். புவனேஷ்வர் குமார், நடராஜன் மற்றும் உனத்கட் என்னுடைய வேலையை எளிதாக்கி விடுகிறார்கள். ஷாபாஷ் அகமதை இம்பேக்ட் பிளேயராக கொண்டு வருவது பயிற்சியாளர் வெட்டோரியின் முடிவு. அவர் இடது கை சுழல் பந்துவீச்சாளரை விரும்பினார். அது தான் எங்களுக்கு வெற்றியை பெற்று தந்தது.

அதே சமயத்தில் அபிஷேக் ஷர்மா ஆச்சரியமான விஷயம். அவர் சிறப்பாக பந்து வீசினார். இரண்டு விக்கெட் களை சீக்கிரத்தில் பெற்றால் 170 ரன்கள் துரத்துவதற்கு கடினம் என்று எங்களுக்கு தெரியும். ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான ஆடுகளங்கள் கொடுக்கப்படுகின்றன.

நான் முன்கூட்டியே ஆடுகளம் தொடர்பாக எதையும் முடிவு செய்வது இல்லை. மேலும் இந்த அணி நிர்வாகத்தில் 60 அல்லது 70 பேர் தங்கள் இதயத்தையும் ஆன்மாவையும் ஈடுபடுத்தி இருக்கிறார்கள். இன்னும் ஒரே ஒரு போட்டி எஞ்சி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்