ரியான் பராக், ஹெட்மயர் அதிரடி: பெங்களூரு அணியின் கனவை தகர்த்த ராஜஸ்தான்

பெங்களூரு அணிக்கு எதிரான வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றது.

Update: 2024-05-22 17:58 GMT

ஆமதாபாத்,

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) புள்ளிப்பட்டியலில் 3-வது, 4-வது இடம் பிடித்த அணிகளான ராஜஸ்தான் ராயல்சும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மல்லுகட்டின.

இதில் 'டாஸ்' ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் ெபங்களூருவை பேட் செய்ய பணித்தார். இதையடுத்து விராட் கோலியும், கேப்டன் பாப் டு பிளிஸ்சிசும் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட், ஸ்டம்பை குறி ைவத்து ஆக்ரோஷமாக பந்துவீசி அவர்களை திணறடித்தார். அவரது பந்து வீச்சில் தடுமாறிய இவர்கள் மற்றவர்களின் பவுலிங்கில் ரன் எடுப்பதில் கவனம் செலுத்தினர். ஸ்கோர் 37-ஐ எட்டிய போது பிளிஸ்சிஸ் (17 ரன்) பவுல்ட் வீசிய பந்தை தூக்கியடித்த போது, அதை ரோமன் பவெல் பாய்ந்து விழுந்து சூப்பராக கேட்ச் ஆனார். 2-வது விக்கெட்டுக்கு கேமரூன் கிரீன் வந்தார். மறுமுனையில் கோலி (33 ரன், 24 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) யுஸ்வேந்திர சாஹல் பந்து வீச்சில் சிக்சருக்கு அடிக்க முயற்சித்து எல்லைக்கோடு அருகே பிடிபட்டார்.

 

இதன் பின்னர் பெங்களூரு அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. கேமரூன் கிரீன் 27 ரன்னிலும், மேக்ஸ்வெல் ரன் ஏதுமின்றியும் அஸ்வின் வீசிய சுழல் வலையில் சிக்கினர். 5 ரன்னில் எளிதான கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்த ரஜத் படிதார் தனது பங்குக்கு 34 ரன்கள் (22 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார்.

கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் (11 ரன்), மஹிபால் லோம்ரோர் (32 ரன்) ஆகியோர் கணிசமான பங்களிப்பை அளித்தனர். ஆனால் ஒரு பேட்ஸ்மேன் கூட அரைசதத்தை நெருங்கவில்லை. 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுக்கு 172 ரன்கள் சேர்த்தது. ராஜஸ்தான் தரப்பில் அவேஷ்கான் 3 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் சாய்த்தனர். டிரென்ட் பவுல்ட் ஒரு விக்கெட் எடுத்ததுடன் 4 ஓவரில் 16 ரன் மட்டுமே வழங்கி சிக்கனத்தை காட்டினார்.

பின்னர் 173 ரன் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தானுக்கு டாம் கோலர் காட்வாலும் (20 ரன்), ஜெய்ஸ்வாலும் (45 ரன், 30 பந்து, 8 பவுண்டரி) திருப்திகரமான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் (17 ரன்), துருவ் ஜூரெல் (8 ரன்) நிலைக்கவில்லை.

5-வது விக்கெட்டுக்கு ரியான் பராக்கும், 'இம்பேக்ட் பேட்ஸ்மேன்' ஹெட்மயரும் ஜோடி போட்டு ஆட்டத்தை வெற்றியை நோக்கி நகர்த்தினர். வேகப்பந்து வீச்சாளர் கேமரூன் கிரீனின் ஒரே ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசி நெருக்கடியை குறைத்தனர்.

 

அணியின் ஸ்கோர் 157-ஆக உயர்ந்த போது ரியான் பராக் (36 ரன், 26 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) முகமது சிராஜியின் பந்து வீச்சில் போல்டு ஆனார். அதே ஓவரில் ஹெட்மயரும் (26 ரன்) வீழ்ந்தார். கடைசி 2 ஓவர்களில் ராஜஸ்தானின் வெற்றிக்கு 13 ரன் தேவைப்பட்டது. 19-வது ஓவரை பெர்குசன் வீசினார். அந்த ஓவரில் ரோமன் பவெல் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் நொறுக்கி ஆட்டத்தை சுபமாக முடித்து வைத்தார்.

ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 174 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது. பவெல் 16 ரன்னுடனும், அஸ்வின் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர். தோல்வியின் மூலம் பெங்களூரு அணி வெளியேறியது.

 

சென்னையில் அடுத்த ஆட்டம்

ராஜஸ்தான் அணி அடுத்து இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியை சென்னை சேப்பாக்கத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் கொல்கத்தாவுடன் மோதும்.

Tags:    

மேலும் செய்திகள்