வார ராசிபலன்: 11.01.2026 முதல் 17.01.2026 வரை
12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்;
இந்த வார ராசிபலன்:-
மேஷம்
உத்திராயண காலத் தொடக்கம் மேஷ ராசியினருக்குப் புதிய விடியலைத் தரும் வாரமாக அமைகிறது. லக்னாதிபதி வலுப்பெறுவதால் எதிலும் துணிச்சலாக முடிவெடுப்பீர்கள்.
குடும்ப உறுப்பினர்களிடையே நிலவி வந்த பனிப்போர் நீங்கி, சுப காரியங்களுக்கான அஸ்திவாரம் இடுவீர்கள். சமூகத்தில் உங்கள் கௌரவம் உயரும்.
உத்தியோகஸ்தர்களுக்குப் பணிச்சுமை இருப்பினும் மேலதிகாரிகளின் முழு ஆதரவு கிட்டும். தொழில் முதலீடுகள் எதிர்பார்த்த லாபத்தைத் தரும். வியாபாரிகளுக்கு மகிழ்ச்சிகரமான வாரம்.
அஜீரணக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் உணவுக் கட்டுப்பாடு அவசியம். ராகு கால துர்க்கை வழிபாடு, ஏழைகளுக்கு பருப்பு தானம் செய்வதும் மனோதிடத்தை அதிகரித்து வெற்றியைத் தேடித்தரும்.
ரிஷபம்
சுக்கிரன் வலுவாக அமர்ந்திருப்பதால் கலை மற்றும் ஆபரணத் துறையில் உள்ளவர்களுக்கு அபரிமிதமான லாபம் கிட்டும் வாரமிது. மனதில் நம்பிக்கையும், மகிழ்ச்சியும் ஏற்படும்.
குடும்ப வாழ்வில் சுமுகமான உறவு நீடிக்கும்; மனைவியின் ஆதரவு தொழிலுக்குப் பக்கபலமாக இருக்கும். ஒரு சிலருக்கு புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகம் கைகூடும்.
உத்தியோகத்தில் சக ஊழியர்களின் பொறாமையைத் தவிர்க்கப் பொறுமை காப்பது நலம். நிதி நிலைமை திருப்திகரமாக இருந்தாலும், தேவையற்ற ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்தால் சேமிப்பு உயரும்.
ஆரோக்கியத்தில் கண்கள் மற்றும் கழுத்து சார்ந்த உபாதைகள் ஏற்படக்கூடும். மகாலட்சுமிக்குத் தாமரை மலர் சாற்றி வழிபடுவதும், பசுவிற்கு அகத்திக்கீரை வழங்குவதும் செல்வச் செழிப்பை அள்ளித் தரும்.
மிதுனம்
புதனின் ஆதிக்கம் வலுப்பெறுவதால் உங்கள் பேச்சாற்றல் மற்றும் புத்திக்கூர்மையால் கடினமான காரியங்களையும் எளிதில் சாதிப்பீர்கள். உங்களுடைய நட்பு வட்டாரம் விரிவடையும்.
உறவினர்களிடையே மறைமுகமாக இருந்த பகைகள் விலகி இணக்கம் ஏற்படும். குடும்பத்தில் தடைப்பட்டிருந்த சுப விசேஷங்கள் மீண்டும் களைகட்டும்.
தொழில் ரீதியாக வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் புதிய வாய்ப்புகள் தேடி வரும். பொருளாதார நிலை ஏறுமுகத்தில் இருக்கும். எதிர்பார்த்த பண வரவு வந்து சேரும்.
நரம்பு மண்டலம் மற்றும் சுவாசம் தொடர்பான பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் விலகும். ஏழை மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்கள் தானம் செய்வது காரிய வெற்றியை உண்டாக்கும்.
கடகம்
சந்திர பகவானின் சஞ்சாரம் காரணமாக இது மனத்தெளிவையும் புத்துணர்ச்சியையும் அளிக்கும் வாரமாக அமைகிறது. வீண் மனக்கவலைகள் நீங்கி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.
குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தைச் செலவிடுவீர்கள்; பழைய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். ஒரு சிலர் குடும்பத்துடன் கோயில் குளங்களுக்கு சுற்றுலா சென்று வருவார்கள்.
உத்தியோகத்தில் பதவி உயர்வு அல்லது பணியிட மாற்றம் சாதகமாக அமையும். வியாபாரத்தில் புதிய கிளைகளைத் தொடங்கும் எண்ணம் நிறைவேறும்.
ஜலதோஷம் போன்ற சிறு தொல்லைகள் ஏற்படலாம். சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வதும், ஏழைகளுக்குத் தயிர் சாதம் தானம் செய்வதும் மன அமைதியையும் உடல் பலத்தையும் அளிக்கும்.
சிம்மம்
சூரியனின் பலத்தால் ஆளுமைத் திறனும் அதிகாரமும் ஓங்கும் வாரமாக இது திகழ்கிறது. அரசு வழிச் சலுகைகள் மற்றும் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். காரிய வெற்றி உண்டு.
குடும்பப் பொறுப்புகள் அதிகரித்தாலும் அதனைத் திறம்பட நிர்வகிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் ஆலோசனைகளுக்கு மதிப்பு கூடும். சமூக அளவிலான முக்கியமான காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
நிர்வாகத் திறமை வெளிப்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் தந்தை வழி உறவுகளின் ஆதரவு கிட்டும். வியாபாரிகள் தங்களுடைய தொழில் விரிவாக்கத்தை திட்டமிட்டபடி செய்யலாம்.
உஷ்ணம் மற்றும் ரத்த அழுத்தம் சார்ந்த ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. செம்பு பாத்திரத்தில் நீர் அருந்துவது, ஏழை எளியவர்களுக்குக் கோதுமை தானம் செய்வது வாழ்வை வளமாக்கும்.
கன்னி
எதையும் திட்டமிட்டுச் செய்யும் உங்கள் குணம் இந்த வாரம் பெரும் வெற்றியை ஈட்டித் தரும். பொறுமைக்கேற்ற பலன்களை பெரும் வாரமாக இது அமைகிறது. கவலைகள் விலகும்.
உறவுகளிடையே பிணக்குகள் தீர்ந்து ஒற்றுமை பலப்படும். புதிய உறவுகள் மூலம் நன்மைகள் நடக்கும். சொந்த பந்தங்கள் மூலம் சுப காரிய நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.
உத்தியோகத்தில் நிலுவையில் இருந்த பணிகள் விரைந்து முடியும்; மேல் அதிகாரிகளின் பாராட்டு மனதிற்கு உற்சாகம் தரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் கையாண்டு போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.
அசதி மற்றும் தூக்கமின்மை ஏற்படலாம்; தியானம் மேற்கொள்வது நலம். பெருமாள் கோவிலில் துளசி அர்ச்சனை செய்வதும், ஆதரவற்றோருக்கு உணவு வழங்குவதும் வெற்றி பெற வழிவகுக்கும்.
துலாம்
சமநிலை மற்றும் நேர்மையைக் கடைப்பிடிக்கும் துலாம் ராசியினருக்கு இது சோதனைகளைக் கடந்து சாதனை படைக்கும் வாரமாகும். இல்லத்தரசிகளின் மனம் மகிழும் விதமாக சம்பவங்கள் நடக்கும்.
குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தைகளால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.
வேலையில் புதிய பொறுப்புகள் வந்து சேரும்; பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
சிறுநீரகம் மற்றும் தோல் தொடர்பான பிரச்சனைகளில் எச்சரிக்கை தேவை. அம்பாளுக்கு நெய் தீபம் ஏற்றி லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும், ஏழைப் பெண்களுக்கு வஸ்திர தானம் செய்வதும் நன்மையை உண்டாக்கும்.
விருச்சிகம்
தைரியமும் வீரமும் கொண்ட விருச்சிக ராசியினருக்கு தடைகளைத் தகர்த்து முன்னேறும் வாரமாக இது அமைகிறது. எதிலும் பின்வாங்காமல் போராடி வெற்றிக் கனியைப் பறிப்பீர்கள்.
குடும்பத்தில் சகோதர வழியில் அனுகூலமான செய்திகள் வரும். உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் முன்னின்று நடத்தி வைப்பீர்கள். வாழ்க்கைத் துணையின் உறவுகளுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள்.
உத்தியோகத்தில் நிர்வாக ரீதியான மாற்றங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். கடன் சுமைகள் குறையத் தொடங்கும்; பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணப்படும்.
ரத்த ஓட்டம் மற்றும் தசை சார்ந்த உபாதைகளில் கவனம் தேவை. முருகப் பெருமானுக்குப் பால் அபிஷேகம் செய்வதும், செந்நிற மலர்களால் அர்ச்சிப்பதும், அன்னதானம் செய்வதும் கிரக பாதிப்புகளைக் குறைக்கும்.
தனுசு
குரு பகவானின் ஆதிக்கம் நிறைந்த தனுசு ராசியினருக்கு இது ஆன்மீகப் பலமும் அறிவுத் திறனும் கூடும் வாரமாகும். பழைய முதலீடுகள் மூலம் எதிர்பாராத லாபம் வந்து சேரும்.
குடும்பத்தில் பெரியவர்களின் வழிகாட்டுதல் வாழ்வின் சிக்கல்களைத் தீர்க்கும். சிக்கல்களுக்கு உரிய தெளிவான முடிவுகளை கையாண்டு வெற்றிகரமாக செயல்படுவீர்கள்.
உத்தியோகத்தில் உங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். பூர்வீகச் சொத்து தொடர்பான வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வங்கி கடனுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நற்செய்தி வந்து சேரும்.
கல்லீரல், மூட்டு வலி சார்ந்த பிரச்சனைகளில் கவனம் தேவை. குரு பகவானுக்கு மஞ்சள் பொடி அபிஷேகம், மஞ்சள் ஆடை சமர்ப்பணம், பெரியோர் ஆசி ஆகியவை ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கும்.
மகரம்
சனியின் ஆதிக்கத்தில் இருந்தாலும் விடாமுயற்சியால் வெற்றிகளைக் குவிக்கும் வாரமிது. நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் நிதானமான பலனைத் தரும்.
குடும்பத்தில் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது மன அமைதிக்கு வழிவகுக்கும். நண்பர்கள் மற்றும் இல்ல துணை உடன் எந்த விதமான கருத்து வேறுபாடுகளையும் வைத்துக் கொள்ள வேண்டாம்.
உத்தியோகத்தில் கடும் உழைப்பிற்குப் பின்பே அங்கீகாரம் கிடைக்கும் என்பதால் தளராது உழைக்கவும். பழைய கடன்களை அடைப்பதற்கான வழிகள் பிறக்கும்.
எலும்பு மற்றும் பற்கள் தொடர்பான பிரச்சனைகளில் விழிப்புணர்வு தேவை. தினமும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி பகவானைத் தரிசிப்பது, முதியோர் இல்லங்களுக்கு உதவி செய்வது, மௌன விரதம் இருப்பது ஆற்றலைத் தரும்.
கும்பம்
சமூக மாற்றங்களிலும் புதிய முயற்சிகளிலும் ஆர்வம் காட்டும் கும்ப ராசியினருக்கு இது லாபகரமான வாரம். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் முழு ஒத்துழைப்பு உங்கள் வளர்ச்சிக்குத் துணையாக இருக்கும்.
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடுகளைச் செய்வீர்கள். புது காரியங்களில் முன்னாள் நின்று வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் புகழ் பரவும் காலகட்டம் இது.
உத்தியோகத்தில் புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்வது எதிர்காலத்திற்கு உதவும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.
வாயுத் தொல்லை, நரம்புத் தளர்ச்சி ஏற்படும் என்பதால் உடற்பயிற்சி அவசியம். அனுமனுக்கு வெண்ணெய் காப்பு சாற்றி வழிபடுவதும், கருப்பு எள் தானம் செய்வதும் தோஷங்களை நீக்கும்.
மீனம்
கருணையும் இறை சிந்தனையும் கொண்ட மீன ராசியினருக்கு இது மனநிறைவும் ஐஸ்வர்யமும் தரும் வாரமாகும். எடுத்த காரியங்கள் அனைத்தும் தடையின்றி வெற்றி பெறும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் குடிகொள்ளும்; பிள்ளைகளின் சாதனைகளால் பெருமிதம் கொள்வீர்கள். இல்ல துணையின் வழிகாட்டுதலால் பல சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள்.
உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிட்டும். வங்கிச் சேமிப்பு உயரும். புதிய முயற்சிகள் மற்றும் முதலீடுகள் ஆகியவற்றால் நல்ல விஷயங்கள் நடைபெறும்.
கண்கள், பாதங்கள் தொடர்பான சிறு உபாதைகள் தோன்றி மறையும். குருவுக்கு மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்வதும், ஏழை எளியவர்களுக்கு உணவு, இனிப்புகளை வழங்குவது வாழ்வில் வசந்தத்தை உண்டாக்கும்.