வார ராசிபலன் - 14.12.2025 முதல் 20.12.2025 வரை... வியாபாரிகளுக்கு அனுகூலமான வாரம் இது
14.12.2025 முதல் 20.12.2025 வரை (கார்த்திகை 28ம் தேதி முதல் மார்கழி 5-ம் தேதி வரை) 12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்.;
மேஷம்
வாரத்தின் முற்பகுதியில் அலைச்சலும், பிற்பகுதியில் தன வரவும் இருக்கும். கணவன், மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு குறையும். உறவினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நிம்மதி தரும்
தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். பழைய வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்வது முக்கியம். உத்தியோகஸ்தர்கள் நிலுவையில் இருந்த வேலைகளை முடிப்பீர்கள்.
ரியல் எஸ்டேட் துறையில் நிதானம் தேவை. பங்குச்சந்தையில் நீண்ட கால முதலீடுகள் பலன் தரும். மாணவர்களுக்கு ஞாபக மறதி ஏற்படலாம். படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
உடல் சூடு மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். முருகப்பெருமான் கோவிலுக்கு செவ்வரளி மாலை மற்றும் கருவறை தீபத்திற்கு நெய் வழங்குவதால் நன்மைகள் ஏற்படும்.
ரிஷபம்
குருபகவான் சஞ்சாரத்தால் பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பழைய கடன்கள் தீர்ந்து மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.
தொழில்துறையினருக்கு லாபம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு கூட்டாளிகளால் நன்மைகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு குறித்த நல்ல செய்திகள் கிடைக்கும்.
ரியல் எஸ்டேட்டில் புதிய மனை திட்டங்களை தொடங்கலாம். ஷேர் மார்க்கெட்டில் கம்ப்யூட்டர் நிறுவன பங்குகள் லாபம் தரும். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்வார்கள்.
உடல் நலனை பொறுத்தவரை நல்ல ஓய்வு வேண்டும். பெருமாள் கோவில்களில் உள்ள தாயார் சன்னதிக்கு மல்லிகை மாலை மற்றும் இனிப்பு பிரசாதம் வழங்குவது நன்மை தரும்.
மிதுனம்
குருவின் சஞ்சாரத்தால் சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள்.
தொழில் துறையினர் போட்டியாளர்களை வெல்ல வேண்டும். வியாபாரிகள் கடை விரிவாக்கத்தை சிறிது காலம் தள்ளி வைக்கவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் ரகசியங்களை சக ஊழியர்களுக்கு தெரிவிக்க வேண்டாம்.
ரியல் எஸ்டேட்டில் சொத்து சம்பந்தமாக வழக்குகளை சமாளிக்க வேண்டும். ஷேர் மார்க்கெட்டில் ஊக வணிகம் இந்த வாரம் வேண்டாம். மாணவர்கள் அதிகமாக வெளியில் சுற்றுவதை தவிர்க்கவும்.
கழுத்து வலி மற்றும் நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். புதன்கிழமை மாலை நேரங்களில் வெள்ளை பசு மாட்டுக்கு கீரைகள் மற்றும் அருகம்புல் தருவதால் நன்மைகள் வந்து சேரும்.
கடகம்
வார இறுதியில் எதிர்பாராத பண வரவு ஏற்படும். உறவினர்கள் வருகையால் வீடு கலகலப்பாக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. பெரியோர்களது ஆசிகளால் நல்லது நடக்கும்.
தொழில்துறையினர் புதிய கிளைகளை தொடங்கலாம். வியாபாரிகளுக்கு பழைய பாக்கிகள் வசூல் ஆகும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றம் அல்லது துறை மாற்றம் கிடைக்கும்.
ரியல் எஸ்டேட்டில் திடீர் செலவுகள் ஏற்படும். ஷேர் மார்க்கெட்டில் நிதானமாக செயல்பட வேண்டும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கைகூடி வரும்.
வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டு வைத்தியத்தால் விலகும். அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு வில்வம் மற்றும் சர்க்கரை பொங்கல் நிவேதனம் செய்து வழிபட சிக்கல்கள் விலகும்.
சிம்மம்
அஷ்டம சனி நடப்பதால் பண விஷயத்தில் எச்சரிக்கை தேவை. யாரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். குடும்பத்தில் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.
தொழில் துறையினருக்கு வேலை ஆட்களால் பிரச்சனை ஏற்பட்டு விலகும். வியாபாரிகள் கணக்கு வழக்குகளை சரியாக பராமரிக்கவும். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும்.
ரியல் எஸ்டேட்டில் புதிய முதலீடுகளை சிறிது காலம் தவிர்க்கவும். ஷேர் மார்க்கெட்டில் வழக்கமான முதலீடுகளே போதுமானது. மாணவர்கள் கல்வியில் வழக்கத்தைவிட கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மூட்டு வலி மற்றும் வாயு தொல்லை ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். ஆதரவற்ற முதியோருக்கு பொருளுதவி மற்றும் அருகில் உள்ள பிள்ளையார் கோவிலில் கோதுமை இனிப்பு தானம் செய்வதும் நன்மை தரும்.
கன்னி
கண்டக சனி என்றாலும் குருவின் தொடர்பு இருப்பதால் பணத்தட்டுப்பாடு ஏற்படாது. குடும்பத்தில் சுபச் செலவுகள் ஏற்படும். புதிய நண்பர்கள் அறிமுகமாகி பல நல்ல விஷயங்கள் நடைபெறும்.
கூட்டுத் தொழில் லாபகரமாக செயல்படும். வியாபாரிகளுக்கு வெளி மாநில வெளிநாட்டு தொடர்புகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பல நல்ல விஷயங்கள் நடந்தேறும்.
ரியல் எஸ்டேட்டில் நிறுவனத்திற்கு தேவையான வாகன சேர்க்கை ஏற்படும். ஷேர் மார்க்கெட்டில் மிதமான லாபம் உண்டு. போட்டி தேர்வுகளில் மாணவர்கள் வெற்றிகளை பெறுவார்கள்.
இடுப்பு வலி அல்லது சிறுநீரக தொற்று ஏற்பட்டு குணமாகும். பெருமாள் கோவிலுக்கு துளசி மாலை மற்றும் பாசிப்பயிறு இனிப்பு ஆகியவை பிரசாதமாக வழங்குவதன் மூலம் நன்மைகள் வந்து சேரும்.
துலாம்
மிகச் சிறப்பான வாரம். 6-ல் சனி, 9-ல் குரு இருப்பது ராஜ யோகம். தொட்டதெல்லாம் துலங்கும். குடும்பத்தில் பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த விஷயம் நடந்தேறும்.
தொழில் துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு போட்டியாளர்களின் தொல்லை விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு உண்டு.
ரியல் எஸ்டேட்டில் புதிய கட்டுமான திட்டங்களை தொடங்கலாம். பங்குச் சந்தையில் புதிய முதலீடுகளை தாராளமாக செய்யலாம். மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டிலும் சாதனை செய்வார்கள்.
நீண்ட நாட்களாக தொல்லையை தந்து வந்த நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கும் காலகட்டம் இது. அருகிலுள்ள அம்பிகை கோவிலில் கருவறை தீபத்திற்கு நெய், மல்லிகைப்பூ மாலை வழங்குவதும் நன்மை தரும்.
விருச்சிகம்
சூரியன் சஞ்சாரம் காரணமாக பேச்சில் நிதானம் தேவை. பணவரவில் தடை தாமதங்கள் ஏற்பட்டு விலகும். இவ்வாரம் மௌனமாக இருப்பது தான் பல விதங்களில் நல்லது.
தொழில்துறையினர் வாடிக்கையாளர்களிடம் கனிவாக பழக வேண்டும். வியாபாரிகள் பணியாளர் விஷயத்தில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
ரியல் எஸ்டேட்டில் சொத்துக்களில் சிக்கல்கள் ஏற்பட்டு விலகும். ஷேர் மார்க்கெட்டில் எதிர்பார்த்த லாபம் அடைய காத்திருக்க வேண்டும். மாணவர்கள் வழக்கத்தை விட கூடுதல் கவனமாக படிக்க வேண்டும்.
உடலில் உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சமர்ப்பணம் செய்து, அங்கு வரும் சிறுவர்களுக்கு இனிப்பு பிரசாதம் தருவது நல்லது.
தனுசு
ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் கௌரவம் மற்றும் அந்தஸ்து உயரும். அர்த்தாஷ்டம சனி நடப்பதால் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு விலகும். சுற்றத்தார்களிடம் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும்.
தொழில் துறையினருக்கு அரசு வழியில் ஆதாயங்கள் கிடைக்கும். வியாபாரிகள் இடமாற்றத்தை எதிர்கொள்ள வேண்டி வரலாம். உத்தியோகஸ்தர்களுக்கு இது சாதகமான வாரம் தான்.
ரியல் எஸ்டேட்டில் எதிர்பாராத செலவினங்கள் ஏற்படும். ஷேர் மார்க்கெட்டில் நீண்ட கால பலம் தரும் முதலீடுகள் செய்யலாம். மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று மகிழ்வார்கள்.
தலைவலி மற்றும் கண்களில் பாதிப்புகள் ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். அருகில் உள்ள சிவன் கோவிலில் வில்வம் மற்றும் திருநீறு ஆகியவை சமர்ப்பித்து, கோவிலுக்கு வரும் பெண்களுக்கு பிரசாதம் தருவதால் நன்மை உண்டு.
மகரம்
மூன்றாம் இடத்தில் சனி பலமாக இருப்பதால் மனதில் புதிய தைரியம் ஏற்படும். இளைய சகோதரர்களால் பல நன்மைகள் உண்டு. பொருளாதார ரீதியாக சில தடங்கல்கள் ஏற்பட்டு விலகும்.
தொழில் துறையினர் புதிய முறைகளை கையாண்டு விற்பனையை அதிகரிக்கலாம். வியாபாரிகள் தொழிலை கம்ப்யூட்டர் மயமாக்கும் காலம் இது. உத்தியோகஸ்தர்களின் தனிப்பட்ட திறமைகள் வெளிப்படும்.
ரியல் எஸ்டேட்டில் விற்காத பழைய சொத்துக்கள் விற்பனை ஆகும். ஷேர் மார்க்கெட்டில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் வழக்கத்தை விட கூடுதல் ஆர்வம் ஏற்படும்.
கை-கால், வலி, பித்த மயக்கம் ஆகியவை ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வெண்ணெய் சாற்றுவதும், கருப்பு நிற பசு மாடுகளுக்கு முட்டைக்கோஸ் உண்ணக் கொடுப்பதும் நன்மை தரும்.
கும்பம்
குருவின் பார்வை தனஸ்தானத்தில் இருப்பதால் பொருளாதார சிக்கல்கள் விலகும். ஜென்ம ராகு மற்றும் பாதச்சனி என்பதால் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் எந்தவித வாக்குவாதமும் வேண்டாம்.
தொழில்துறையினர் பெரிய முதலீடுகளை சிறிது காலம் தள்ளி வைக்கவும். வியாபாரிகள் நூதன விளம்பரங்கள் செய்து வியாபாரத்தை பெருக்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமாக இருக்க வேண்டும்.
ரியல் எஸ்டேட்டில் புதிய சொத்துக்கள் வாங்கும் பொழுது வில்லங்கங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பங்குச் சந்தையில் புதிய முதலீடுகள் வேண்டாம். மாணவர்கள் சுறுசுறுப்பாக செயல்படுவது முக்கியம்.
உணவு ஒவ்வாமை மற்றும் பல்வலி ஆகியவை ஏற்பட்டு வைத்தியத்தால் விலகும். தினமும் மாலையில் அருகில் உள்ள திருக்கோவிலில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைத்து வணங்குவது சிக்கல்களை விலக்கும்.
மீனம்
ஜென்ம சனி நடப்பதால் மன அழுத்தம் இருக்கும். சதுர்த்த கேந்திரத்தில் உள்ள ராசியாதிபதி குரு மனதில் அமைதியைத் தருவார். குடும்பச் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் தேவை.
தொழில்துறையினர் கடினமாக உழைக்க வேண்டிய காலகட்டம் இது. வியாபாரிகளும் நேரம் காலம் பார்க்காமல் பணியாற்ற வேண்டிய காலம். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.
ரியல் எஸ்டேட்டில் கட்டுமான பணிகளில் தாமதங்கள் ஏற்பட்டு நீங்கும். ஷேர் மார்க்கெட்டில் புதிய முதலீடுகளை தவிர்க்கவும். மாணவர்கள் மூத்த மாணவர்கள் அல்லது ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறவும்.
உடலில் சோர்வு மற்றும் கை கால்களில் வலி ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். அருகில் உள்ள சித்தர்களின் ஜீவ சமாதிகளுக்கு சென்று வழிபாடு செய்வதும், ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்வதும் நன்மை தரும்.