பரப்பன அக்ரஹார சிறையில் சக கைதிகளுடன் நடிகர் தர்ஷன் மோதல்

பரப்பன அக்ரஹார சிறையில் சக கைதிகளுடன் நடிகர் தர்ஷன் மோதலில் ஈடுபட்டதாகவும், வக்கீல்கள் நியமன விவகாரத்தில் அவர்களை தர்ஷன் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.;

Update:2025-12-09 07:15 IST

பெங்களூரு,

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் தர்ஷன் அடைக்கப்பட்டுள்ளார். சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் அவர் சிறைவாசம் அனுபவிக்கிறார். அவருடன், இதே கொலை வழக்கில் கைதான சித்ரதுர்காவை சேர்ந்த அனுகுமார், ஜெகதீஷ், லட்சுமண், நாகராஜ், பிரதோஷ் உள்ளிட்டோரும் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறை தலைமை சூப்பிரண்டாக ஐ.பி.எஸ். அதிகாரியான அஞ்சுகுமார் நியமிக்கப்பட்ட பின்பு கைதிகளுக்கு கிடைத்த சிறப்பு சலுகைகள் அனைத்தும் கிடைக்காமல் போய் இருப்பதாக சொல்லப்படுகிறது. சிறைக்குள் கைதிகள் பீடி, சிகரெட்டுகள் கூட கிடைக்காமல் பரிதவித்து வருவதாகவும், இதற்காக 4 நாட்கள் கைதிகள் தொடர் போராட்டமும் நடத்தினர்.

அதுபோல், நடிகர் தர்ஷனும் சிறையில் வழங்கப்படும் உணவை வரிசையில் நின்று தான் வாங்க வேண்டும், கழிவறைகளை சுத்தம் செய்வது உள்ளிட்ட வேலைகளை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்ற உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த சலுகைகளும் கிடைக்காததால் தர்ஷன் அதிருப்தி அடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்தநிலையில், சிறையில் தான் அடைக்கப்பட்டுள்ள அறையில் இருக்கும் சக கைதிகளான லட்சுமண், அனுகுமார், ஜெகதீஷ், பிரதோசுடன் தர்ஷன் மோதலில் ஈடுபட்டதாகவும், அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாகவும், இதுபற்றி அறிந்த சிறை அதிகாரிகள் தர்ஷனை பிடித்து விலக்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

குறிப்பாக அனுகுமார், ஜெகதீசை தர்ஷன் காலால் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. இவர்கள் 2 பேரும் ரேணுகாசாமி கொலை வழக்கில் தங்களுக்கு ஆதரவாக கோர்ட்டில் வாதாடுவதற்காக நல்ல வக்கீல்களை நியமிக்கும்படி கேட்டதாகவும், இந்த விவகாரத்தில் தான் சக கைதிகளுடன் நடிகர் தர்ஷன் மோதலில் ஈடுபட்டு தாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த மோதலுக்கு பின்பு அனுகுமார் மற்றும் ஜெகதீஷ் தங்களை பெங்களூருவுக்கு பதில் தங்களது சொந்த ஊரான சித்ரதுர்கா சிறைக்கு மாற்றும்படி அதிகாரிகளிடம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் பரப்பன அக்ரஹார சிறையில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்