நடிகை பாலியல் வழக்கு.. தீர்ப்பை வாசிக்கும் போது திலீப் செய்த காரியம்

நடிகர் திலீப் கண்களை மூடியபடி கோர்ட்டில் பயபக்தியுடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிற்கும் கூண்டில் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தார்.;

Update:2025-12-09 07:22 IST

எர்ணாகுளம்,

பிரபல நடிகை தொடர்ந்த பாலியல் துன்புறுத்தல் வழக்கில் மலையாள நடிகர் திலீப்பை விடுவித்து கேரள கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது. அதே சமயம் இந்த வழக்கில் 6 பேரை குற்றவாளிகள் என அறிவித்தது.

முன்னதாக இந்த வழக்கின் தீர்ப்பையொட்டி எர்ணாகுளம் கோர்ட்டிற்கு திலீப் வந்து இருந்தார். வெள்ளை நிற சட்டை மற்றும் நீல நிற ஜீன்ஸ் பேன்ட் அணிந்தபடி திலீப் வந்திருந்தார். லேசான தாடியுடன் நெற்றியில் சந்தனம், குங்குமம் வைத்திருந்தார். கண்களை மூடியபடி கோர்ட்டில் பயபக்தியுடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிற்கும் கூண்டில் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தார். அதேவேளையில் பல்சர் சுனில், விசாரணை தொடங்குவதற்கு முன்பாக மற்றவர்களுடன் அரட்டை அடித்தபடி பேசிக்கொண்டிருந்தார். நீதிபதி தீர்ப்பை வாசிக்க தொடங்கியதும் நடிகர் திலீப், மீண்டும் கண்களை மூடி பிரார்த்தனையில் ஈடுபட தொடங்கினார். யார், யார் குற்றவாளிகள் என நீதிபதி ஒவ்வொருவரின் பெயரை வாசித்த போது, திலீப் மிகுந்த பதட்டத்துடன் இருந்தார்.

குற்றவாளிகள் பெயரில் தனது பெயர் அறிவிக்கப்படவில்லை என அறிந்ததும் நிம்மதி பெருமூச்சு அடைந்தார். அடுத்த சில நிமிடங்களில் திலீப் விடுதலை என நீதிபதி அறிவித்தபோது, மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக கோஷம் எழுப்பப்பட்டது. மிகுந்த இறுக்கத்துடன் இருந்த திலீப், கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக புன்னகையுடன் இரு கைகளையும் மேலே தூக்கி அமைதியாக பிரார்த்தனை செய்தார். அடுத்த சில நிமிடங்கள், கோர்ட்டு வளாகம் கொண்டாட்டத்தில் திளைத்தது. வக்கீல்கள், பத்திரிகையாளர்கள் என பலரும் நடிகர் திலீப்புக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதேவேளையில் பலர் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்