தெய்வீக தலையீட்டால் ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தை இயக்கினேன் - ரிஷப் ஷெட்டி
‘காந்தாரா’ படத்தை வெறும் பணத்துக்காக மட்டும் உருவாக்கவில்லை என்று ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார்.;
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா சாப்டர் 1’ படம் கடந்த 2ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் ருக்மணி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் இதுவரை ரூ.800 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. ஆங்கிலத்தில் டப்பிங் செய்து திரையரங்குகளில் வெளியிடப்படும் முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் பெறுகிறது . தற்போது ஆங்கிலத்திலும் வெளியானதால் விரைவில் ரூ.1,000 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘காந்தாரா சாப்டர் 1’ படம் குறித்து ரிஷப் ஷெட்டி “இதுபோன்ற கதையை வெறும் பணத்துக்காக மட்டும் செய்துவிட முடியாது. நான் வேறு கதைகளைத் தேர்வு செய்திருந்தால் ரிஸ்க் எடுப்பதைத் தவிர்த்திருப்பேன். ‘காந்தாரா’வை மொழி மற்றும் கலாச்சார வேறுபாடுகளைக் கடந்து பார்வையாளர்கள் அதிகம் பேசியபோது, இந்தக் கதையை நியாயத்துடன் முடிக்க வேண்டும் என்று நினைத்தேன். ‘காந்தாரா’வின் முன் கதையைச் சொல்வதன் மூலம் அந்தப் படத்துக்கு நியாயம் செய்ய முடியும் என்று நம்பினேன். பின்னர் தெய்வீக தலையீட்டால் ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தை இயக்கினேன்.
உண்மையைச் சொன்னால், ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தை முடிக்கும் வரை வேறு பணிகளில் கவனம் செலுத்த வேண்டாம் என்று நினைத்தேன். அப்போது ‘ஜெய் ஹனுமான்’ வாய்ப்பு வந்ததால் ஏற்றுக் கொண்டேன். அந்தக் கதை என்னை விரட்டிக் கொண்டு வந்தது. மறுக்க முடியவில்லை. புராணங்கள், வரலாற்றுப் பின்னணி கதைகள் மீது எனக்கு ஆர்வம் இருப்பதால் ஒப்புக் கொண்டேன். ஒரு நடிகராகவோ அல்லது இயக்குநராகவோ ஒரே பாணியில் ஒட்டிக்கொண்டிருக்க முடியாது. மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என நினைக்கிறேன்” என்றார்.