என் அம்மாவுக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம் - ஸ்வேதா மோகன்
கலைமாமணி விருது அறிவித்த தமிழக அரசுக்கும், ரசிகர்கள் காட்டும் அன்புக்கும் நன்றி என்று ஸ்வேதா மோகன் கூறியுள்ளார்.;
2023-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் கலைமாமணி விருது பெறுவோர் பட்டியலில் பிரபல பின்னணி பாடகி ஸ்வேதா மோகனும் இடம்பிடித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, "என் அம்மாவுக்கு (சுஜாதா மோகன்) 4 வருடங்களுக்கு முன்பு கலைமாமணி விருது கிடைத்தது. இப்போது எனக்கும் கிடைத்திருக்கிறது. இது எனது அடுத்தடுத்த முயற்சிகளுக்கு ஊக்கம் அளிக்கிறது. விருது அறிவித்த தமிழக அரசுக்கும், ரசிகர்கள் காட்டும் அன்புக்கும் நன்றி.
என்னை விட சின்ன பையன் அனிருத்துக்கும் கலைமாமணி விருது கிடைத்திருக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு ஒரு சிறிய வருத்தம் என்னவென்றால், இதுவரை என் அம்மாவுக்கு தேசிய விருது கிடைத்தது இல்லை. எத்தனையோ பாடல்கள் பாடி, அர்ப்பணிப்பை கொட்டிய அவருக்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை என்பது தெரியவில்லை.
தேர்வுக்குழுவின் இறுதிபட்டியல் வரை செல்லும் என் அம்மாவின் பெயர் விருதுக்கான பட்டியலில் இடம்பெறாமலேயே போகிறது. நிறைய விஷயங்களால் அது நடக்காமல் போகிறது. எனவே விரைவில் அவர் தேசிய விருது பெற வேண்டும் என்பது என் ஆசை" என்று கூறினார்.