ஷங்கர் மகன் அர்ஜித்திற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல நடிகை
பிரபுதேவா இயக்கத்தில் ஷங்கரின் மகன் அர்ஜித் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.;
சென்னை,
தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனராக அறியப்படுபவர் ஷங்கர். தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து தலைசிறந்த இயக்குனராக கொண்டாடப்பட்டார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான இந்தியன் - 2, கேம் சேஞ்சர் எதிர்பார்த்த அளவில் வெற்றியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஏ. ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். ஏ. ஆர். முருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் 'மதராஸி' படத்தில் பணியாற்றியும் வருகிறார். இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல்படி அர்ஜித் விரைவில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளாராம். அவர் ஹீரோவாக நடிக்க உள்ள படத்தை பிரபுதேவா இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் மமிதா பைஜு அர்ஜித்திற்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.