ரக்சன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீடு

சி.ஆர். மணிகண்டன் இயக்கும் புதிய படம் மொய் விருந்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது.;

Update:2025-12-09 18:54 IST

எஸ்கே பிலிம்ஸ் சார்பில் கமலகண்ணன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சி.ஆர். மணிகண்டன் இயக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. இப்படத்தின் நாயகனாக ரக்சன் நடித்துள்ளார். தமிழ்நாட்டில் இன்றும் நடைமுறையில் இருக்கும் பாரம்பரியமான மொய் விருந்தை அடிப்படையாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது.

படத்தின் டைட்டில் குறித்து இயக்குநர் மணிகண்டன் “நான் பேராவூரணி எனும் ஊருக்கு சென்றபோது, 'மொய்விருந்து' நடப்பதை பார்த்தேன். கோடிக்கணக்கில் மொய் வரும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஒரு குடும்பம் மூன்று வருடத்திற்கு ஒரு முறை தான் மொய் விருந்து நடத்த முடியும். ஏனென்றால், அந்த 3 வருடத்தில் அவர்கள் வாங்கிய மொய்ப்பணத்தை திருப்பி செய்ய வேண்டும். அப்படி சரியாக செய்பவர்களுக்கே அதிக மொய் வரும். இந்த பழக்கம் மூலம் அனைவருக்கும் உதவி கிடைக்கும். இது எனக்கு பெரிய ஆச்சர்யத்தை தந்தது. இதை மையமாக வைத்து உருவாகியது தான் இந்தப்படம். அதனால் தான் இந்தப்படத்திற்கு 'மொய் விருந்து' என்று டைட்டில் வைத்துள்ளோம். இது அனைவருக்கும் பிடிக்கும்படியான எளிமையான அழகான பேமிலி டிராமா" என்றார்.

பாலுமகேந்திராவின் "வீடு" படப்புகழ் 'ஊர்வசி' அர்ச்சனா இப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் டிவி புகழ் ரக்சன் மற்றும் ஆயிஷா நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் அபர்ணதி, தீபா சங்கர், சுஜாதா, மானஸ்வி கொட்டாச்சி, அருள்தாஸ், நாமோ நாராயணன், கஜராஜ், தங்கதுரை, லொள்ளு சபா மாறன், கிச்சா ரவி, முருகானந்தம் உட்பட பலர் இணைந்து நடித்துள்ளனர். படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்