‘தணிக்கை வாரியம் காலாவதி ஆகிவிட்டது’ - இயக்குனர் ராம் கோபால் வர்மா
திரைப்பட தணிக்கை என்பது அதிகாரத்தின் ஒரு சடங்கு என ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.;
மும்பை,
விஜய் நடிப்பில் 'ஜனநாயகன்', சிவகார்த்திகேயன் நடிப்பில் 'பராசக்தி' திரைப்படங்கள் சென்சார் பிரச்சினையில் சிக்கின. அதில் விஜய் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் படம், பல வெட்டுகளுக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினை தமிழ்நாடு மட்டுமின்றி, பல மாநில திரைத் துறையினர் மத்தியிலும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
இந்த நிலையில் பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா இந்த விவகாரம் குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
“நடிகர் விஜய்யின் திரைப்படத்திற்கு ஏற்பட்டுள்ள தணிக்கை சிக்கலைத் தாண்டி ஒட்டுமொத்தமாக பார்த்தால் கூட, இந்த காலகட்டத்திற்கு தணிக்கை வாரியம் தேவை என்பதே முட்டாள்தனமானது. தணிக்கை வாரியம் என்பது காலாவதி ஆகிவிட்டது.
ஒரு சிறுவன் தனது அலைபேசியில் பயங்கரவாதிகள் நடத்தும் கொடூர தாக்குதல்களை பார்க்க முடிகிறது. இணையத்தின் ஆபாசப் பக்கங்களுக்குள் நுழைய முடிகிறது. சமூக வலைதளம் என்ற பெயரில், அனைத்துத் தரப்பினரும் இன்று தகாத வார்த்தைகளைப் பேசுகிறார்கள்.
'சினிமா ஒரு வலிமையான ஊடகம்' என்ற பழைய நம்பிக்கையை நீங்கள் முன்வைத்தால், சினிமாவை விட சமூக ஊடகங்களுக்கு இன்று அதிக வீச்சு இருக்கிறது என்ற உண்மையை மறுக்க முடியாது.
இப்படிப்பட்ட நிலையில், திரைப்படத்தில் வரும் ஒரு வார்த்தையை நீக்குவதாலோ, ஒரு காட்சியை வெட்டுவதாலோ அல்லது சிகரெட்டை மறைப்பதாலோ, சமுதாயத்தைப் பாதுகாத்துவிடலாம் என்று தணிக்கை வாரியம் நம்புவது நகைச்சுவையானது.
தணிக்கை வாரியம் உருவான காலத்தில் கட்டுப்பாடுகள் அர்த்தமுள்ளதாக இருந்தது. ஆனால் இன்று, எந்தவொரு கட்டுப்பாடும் சாத்தியமற்றது, ஏனென்றால் மக்கள் எதைப் பார்க்க வேண்டும் அல்லது பார்க்கக்கூடாது என்பதை இனி யாராலும் தீர்மானிக்க முடியாது.
இன்றைய காலகட்டத்தில் தணிக்கை வாரியம் எதையும் தடுக்க முடியாது. மாறாக அது பார்வையாளர்களை அவமதிக்கிறது. நம்மை யார் ஆள வேண்டும் என்பதை தீர்மானிக்கும் தகுதி நமக்கு இருக்கும்போது, நாம் எதை பார்க்க வேண்டும்? எதை கேட்க வேண்டும்? என்பதை தீர்மானிக்கும் திறன் நமக்கு இல்லையா?
தணிக்கை வாரியம் இப்போது உண்மையில் செய்வது பாதுகாப்பு அல்ல, நாடகம் மட்டுமே. இது அதிகாரத்தின் ஒரு சடங்காகும். மேலும் அது தார்மீக பொறுப்பு என்ற மாறுவேடத்தில் சுற்றி வருகிறது. இந்த பாசாங்குத்தனம் ஆபத்தானது.
திரைப்படம் பார்ப்பதற்கான வயதை நிர்ணயம் செய்வதில் அர்த்தம் உள்ளது. திரைப்படத்தின் உள்ளடக்கம் குறித்து எச்சரிப்பதில் அர்த்தம் உள்ளது. ஆனால் தணிக்கை செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை.
எனவே, ஏதாவது ஒரு படத்திற்கு பிரச்சினை வரும்போது இதுபற்றி எழுதுவதற்கு பதில், தணிக்கை வாரியத்தை உருவாக்கிய அந்த குறிப்பிட்ட சிந்தனை முறைக்கு எதிராக திரைத்துறையினர் போராட வேண்டும்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.