இணையத்தில் வைரலான 'பிரெட்டி லிட்டில் பேபி' பாடகி காலமானார்
கோனி பிரான்சிஸ் 2018-ம் ஆண்டுக்கு பிறகு இசை பணிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றார்.;
வாஷிங்டன்,
அமெரிக்காவை சேர்ந்த பாப் இசை பாடகியும், நடிகையுமான கோனி பிரான்சிஸ்(வயது 87), தனது இளம் வயதிலேயே உலக அளவில் பிரபலமான இசைக் கலைஞராக உயர்ந்தார். 1950-60களில் முன்னணி பாடகியாக திகழ்ந்த இவர், அமெரிக்கா மட்டுமின்றி ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் வெற்றிகரமான பெண் இசை கலைஞராக அறியப்பட்டார்.
இவர் பாடிய 'ஸ்டுபிட் குபிட்', 'லிப்ஸ்டிக் ஆன் யுவர் காலர்', 'வேர் தி பாய்ஸ் ஆர்' உள்ளிட்ட பல பாடல் ஆல்பங்கள் விற்பனையில் சாதனை படைத்தன. இவருக்கு 4 முறை திருமணமாகி விவாகரத்து ஏற்பட்டது. பின்னர் 2003-ம் ஆண்டு டோனி பெரட்டி என்பவரை கோனி பிரான்சிஸ் திருமணம் செய்து கொண்டார். இவர்களது இல்லற வாழ்க்கை சுமார் 18 ஆண்டுகள் நீடித்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு டோனி பெரட்டி உயிரிழந்தார்.
இசைத்துறையில் பல சாதனைகளை படைத்த கோனி பிரான்சிஸ், தனது தனிப்பட்ட வாழ்வில் மோசமான பிரச்சினைகளை எதிர்கொண்டார். கடந்த 1974-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி, நியூயார்க்கில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியின்போது, ஓட்டல் வளாகத்திற்குள் அடையாளம் தெரியாத ஒரு நபரால் கோனி பிரான்சிஸ் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் கோனி பிரான்சிஸ்க்கு 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்கப்பட்டது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கோனி பிரான்சிஸ் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்க்க தொடங்கினார். தொடர்ந்து 1981-ம் ஆண்டு கோனியின் சகோதரர் ஜார்ஜ், மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். அடுத்தடுத்து நிகழ்ந்த துயரங்களால் மனதளவில் பாதிக்கப்பட்ட கோனி பிரான்சிஸ், தற்கொலைக்கு முயற்சி செய்து பின்னர் அதிர்ஷடவசமாக காப்பாற்றப்பட்டார். இவர் 1984-ம் ஆண்டு 'ஹூ இஸ் சாரி நவ்' என்ற பெயரில் தனது சுயசரிதை புத்தகத்தை எழுதினார்.
தொடர்ந்து புகழ் வெளிச்சத்தில் இருந்து வந்த கோனி பிரான்சிஸ், உடல்நலம் சார்ந்த காரணங்களால் 2018-ம் ஆண்டுக்கு பிறகு இசை பணிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றார். இதற்கிடையில், கோனி பிரான்சிஸ் கடந்த 1962-ம் ஆண்டு பாடிய 'பிரெட்டி லிட்டில் பேபி' என்ற பாடல் சமீபத்தில் இணையத்தில் வைரலாக பரவி, இளைஞர்களை கவர்ந்தது. இதன் பிறகு பலரும் கோனி பிரான்சிஸ் குறித்து இணையத்தில் தேடத் தொடங்கி, அவரது மற்ற பாடல்களையும் கேட்டு ரசித்தனர்.
இந்த நிலையில், 87 வயதான கோனி பிரான்சிஸ், உடல்நலக்குறைவால் இன்று காலாமானார். இந்த தகவலை அவரது நண்பர் ரான் ராபர்ட்ஸ் பேஸ்புக்கில் உறுதி செய்துள்ளார். அண்மையில் இடுப்பில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைக்கு பிறகு கடுமையான வலியால் கோனி பிரான்சிஸ் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில், தற்போது அவர் உயிரிழந்த செய்தி, கோனி பிரான்சிஸ் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.