“டியூட்” திரைப்படத்தை பாராட்டிய திருமாவளவன்

தனக்கு காதலி துரோகம் இழைத்துவிட்டாள் என்று பழிவாங்க நினைக்காமல், அவள் விரும்புகிறவனோடு அவள் வாழட்டும் என்று போராடுவது புதிய அணுகுமுறை என்று திருமாவளவன் கூறியுள்ளார்.;

Update:2025-11-01 14:03 IST

சென்னை,

பிரபல இயக்குனர் சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த 17ம் தேதி வெளியான படம் ‘டியூட்’. இந்த படத்தினை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் கதாநாயகியாக மலையாள சினிமாவின் முன்னணி நடிகையான மமிதா பைஜு நடித்துள்ளார்.காதல், காமெடி கதைக்களத்தில் உருவான இந்த படத்தில் பரிதாபங்கள் ராகுல், நேகா ஷெட்டி, சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் ஹிட் கொடுத்து வருகிறது.

இந்நிலையில், ‘டியூட்’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் படத்தின் இயக்குநரைப் பாராட்டியுள்ளார்.அவர், “காதலை மையமாகக் கொண்டு ‘டியூட்’ திரைப்படம் ஆணவக் கொலைக்கு எதிராகவும் பேசுகிறது. காதலுக்கு சாதி, மதம், பொருளாதாரம் போன்ற எந்த வரையறையும் தேவையில்லை. இரு மனங்கள் போதும் என்ற வரையறையை முன்னிறுத்தி இந்தத் திரைப்படத்தை கீர்த்தீஸ்வரன் இயக்கியிருக்கிறார்.சமூகத்தின் மிக முக்கியமான நாள்தோறும் நாம் சந்தித்துக்கொண்டிருக்கிற மிகப்பெரிய ஒரு சிக்கலை மையமாகக் கொண்டு இந்தத் திரைப்படத்தை பிரமாண்டமாக கீர்த்தீஸ்வரன் இயக்கியிருக்கிறார். இந்த தலைமுறைக்கு பொருந்தும் வகையில் இந்தத் திரைப்படத்தை அவர் படைத்திருப்பது அவருடைய கலைப்படைப்பாற்றலை வெளிப்படுத்துகிறது. தனக்கு காதலி துரோகம் இழைத்துவிட்டாள் என்று பழிவாங்க நினைக்காமல், அவள் விரும்புகிறவனோடு அவள் வாழட்டும் என்று அவளுக்காக போராடுவது புதிய அணுகுமுறை.

ஜென் சி கிட்ஸ் என்று சொல்லக்கூடிய 21ஆம் நூற்றாண்டை சார்ந்தவர்களின் நட்பு - காதல் இரண்டுக்கும் இடையிலான புரிதலையும் மிகச்சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். நட்பு வேறு காதல் வேறு என்றாலும் காதலுக்கு நட்புதான் அடிப்படையானது 'பிரண்ட்ஷிப்தான் லவ்' என்று ஒரு இடத்திலே கதாநாயகருடைய நண்பன் பேசுகிற ஒரு வசனம் சிறப்பாக இருக்கிறது. நட்புதான் காதலுக்கு அடிப்படையாக இருக்கிறது என்பதை அடுத்தடுத்து வரக்கூடிய காட்சியில் பதிவு செய்கிறார். இப்படத்தை பிராக்டிகலா, நடைமுறை சாத்தியம் உள்ளதா என்ற கேள்வி எழுப்பலாம். ஆனால் இதை ஒரு விவாதமாக்கி இருக்கிறார் அல்லது இதை வெளிச்சப்படுத்தி இருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கதாகும்." எனக் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்