கேரளாவில் ‘காந்தாரா 2’ பட வெளியீட்டில் சிக்கல்
ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்திருக்கும் ‘காந்தாரா 2’ படம் வரும் அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது.;
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த கன்னட திரைப்படமான ‘காந்தாரா’ கர்நாடகாவில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. காந்தாராவின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, ரிஷப் ஷெட்டி அதன் 2-ம் பாகத்தில் பணியாற்றி வருகிறார், இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.படப்பிடிப்பு முடிவடைந்து, தயாரிப்பாளர்கள் போஸ்ட் புரொடக்சன் வேலைகளில் மும்முரமாக உள்ளனர். அஜனீஷ் லோகநாத் இசையமைத்துள்ள இந்த படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
‘காந்தாரா 2’ படத்தில், நடிகர்களின் கதாபாத்திரத்தை படக்குழு அறிமுகம் செய்து, போஸ்டரை வெளியிட்டது. இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. பல்வேறு மொழிகளில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இதன் மலையாள வெளியீட்டு உரிமையினை பிரித்விராஜ் கைப்பற்றி இருக்கிறார். இதன் வெளியீட்டில் தான் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.
கேரளாவில் இதர மொழி படங்கள் வெளியிடும் போது, பங்குத் தொகை 50% மட்டுமே என்ற விதி இருக்கிறது. ஆனால், ‘காந்தாரா 2’ படத்திற்கு 55% பங்குத் தொகை வேண்டும் என்று ப்ரித்விராஜ் தயாரிப்பு நிறுவனம் கேட்டிருக்கிறது. இதனால் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் இருவருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்திருக்கிறது. இதனால், இப்படம் திட்டமிட்டப்படி வெளியாகாது என்கிறார்கள்.
இந்தப் பிரச்சினையில் ஹோம்பாளே நிறுவனம் தலையிட்டு பேசினால் சுமுக முடிவு எட்டும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஆனால், பிரித்விராஜ் நிறுவனத்திடம் விநியோக உரிமை கொடுக்கப்பட்டுவிட்டதால், அந்நிறுவனம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது விரைவில் தெரியவரும்.