"பாம்" திரைப்பட விமர்சனம்
இயக்குனர் விஷால் வெங்கட் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ள "பாம்" படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.;
சென்னை,
காளக்கண்மாய்பட்டி என்ற கிராமம், பிரிவினை சூழ்ந்து காளப்பட்டி, கம்மாப்பட்டி என இரண்டாக பிரிகிறது. பல ஆண்டுகளாக இரு கிராமத்தினரும் அடிதடி, வெட்டுக்குத்து என விரோத மனப்பான்மையுடன் இருக்கிறார்கள்.
இரு கிராமத்தையும் ஒன்றிணைக்க நண்பர்களான அர்ஜுன் தாசும், காளி வெங்கட்டும் போராடுகிறார்கள். ஒருகட்டத்தில் காளி வெங்கட் திடீரென உயிரிழந்துபோகிறார். அர்ஜுன் தாசை தவிர வேறு யாராலும் காளி வெங்கட்டின் உடலை தூக்க முடியாமல் போகிறது.
காளி வெங்கட்டின் உடலில் சாமி இறங்கியிருப்பதாக ஊர் பூசாரி குறியாடி தெரிவிக்க, இரண்டு ஊர்மக்களும் அவரை தெய்வமாகவே வழிபடுகிறார்கள். இதற்கிடையில் தெய்வம் யாருக்கு சொந்தம்? என்ற பிரச்சினை உருவாகிறது. இதனால் மீண்டும் இரு கிராமத்தினரிடையே தகராறு வெடிக்கிறது.
காளி வெங்கட்டுக்கு என்ன ஆனது? இரு கிராமத்தினரிடையே நீடிக்கும் பிரச்சினை தீர்ந்ததா? அர்ஜுன் தாஸ் என்ன செய்தார்? என்பதே கலகலப்பான மீதி கதை.
ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பால் அசரவைத்துள்ளார், அர்ஜுன் தாஸ். காளிவெங்கட்டை மட்டுமல்ல கதையையும் சுமந்திருக்கிறார். கர்ஜிக்கும் குரலை காட்டி சாமியாடும் இடங்களில் சிலிர்ப்பு. காளிவெங்கட்டின் குணச்சித்திர நடிப்பு கவனிக்க வைக்கிறது. 'இமேஜ்' பார்க்காமல் நடித்ததற்கு பாராட்டலாம். அழகு மட்டுமல்ல நடிக்கவும் தெரியும் என்று நிரூபித்துள்ளார், சிவாத்மிகா ராஜசேகர்.
நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன், டி.எஸ்.கே., கிச்சா ரவி, பூவையார், சில்வென்ஸ்டன், ரோஹன், காவ்யா என அனைவரது நடிப்பிலும் எதார்த்தம் பளிச்சிடுகிறது. பி.எம்.ராஜ்குமாரின் ஒளிப்பதிவில் கிராமத்து சூழல் கண்முன் நிழலாடுகிறது. டி.இமான் இசை படத்துடன் ஒன்ற செய்கிறது. பாடல்கள் மனதில் ஒட்டவில்லை.
சில இடங்களில் காட்சிகள் முகம் சுழிக்க வைத்தாலும், அதன் பின்னணியில் இருக்கும் கலகலப்பு அதை மறக்கடிக்கிறது. சில காட்சிகளை முன்கூட்டியே யூகிக்க முடிகிறது. காளி வெங்கட்டுக்கு என்ன ஆனது? என்பதை தெளிவுபடுத்த தவறிவிட்டார்கள்.
கற்பனையான ஒரு கிராமத்தை காட்சிப்படுத்தி, அதில் பிரிவினை மண்டி கிடக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அறிவியலும், ஆன்மிகமும் கலந்து காட்சிப்படுத்தி, ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் விஷால் வெங்கட்
பாம் - ஓடிடுங்க...