மோகன் ஜியின் "திரவுபதி 2" எப்படி இருக்கிறது?- விமர்சனம்
வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள திரவுபதி 2 படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.;
சென்னை,
14-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வல்லாள மகாராஜாவின் வரலாற்று கதை.
திருவண்ணாமலையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்கிறார் வீர வல்லாள மகாராஜாவான நட்ராஜ் (நட்டி). அவரது கருட படையில் குறுநில மன்னரின் வாரிசு வீரசிம்ம காடவராயரான ரிச்சர்ட் ரிஷி இருக்கிறார்.
இதற்கிடையில் வட இந்தியாவை கைப்பற்றிய துருக்கியர்கள் தென்னிந்தியாவை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். இதை எதிர்த்து போரிடும் நட்ராஜ் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். மன்னரைக் காப்பாற்ற முடியவில்லை என்ற ஆதங்கத்தில் உயிரை மாய்த்துக்கொள்ள துணியும் ரிச்சர்ட் ரிஷி முன்பு நட்ராஜின் ஆன்மா தோன்றி சில பொறுப்புகளை அளித்து மாயமாகி விடுகிறது.
அந்த பொறுப்புகளை நிறைவேற்றும் முயற்சியில் ரிச்சர்ட் ரிஷி ஈடுபட அவரது மனைவி திரவுபதியான ரக்ஷனா சிலரது சதி வேலையில் சிக்கி கணவரை பிரிகிறார். சதி வேலையில் சிக்கிய ரக்ஷனாவின் கதி என்ன? மகாராஜாவின் உத்தரவை நிறைவேற்ற துணிந்த ரிச்சர்ட் ரிஷியின் நிலை என்ன? ஆகிய கேள்விகளுக்கு விடையாக மீதிக்கதை நீள்கிறது.
தோற்றம், உடல் மொழி என வீரசிம்ம காடவராயராகவே ரிச்சர்ட் ரிஷி வாழ்ந்து இருக்கிறார். கதாபாத்திரத்துக்கான அவரது மெனக்கடல் தெரிகிறது. மகாராஜா கதாபாத்திரத்துக்கு கம்பீரம் சேர்க்கும் நடிப்பால் கவரும் நட்டி நட்ராஜ், வசன உச்சரிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். அவரது முடிவு பதைபதைப்பை தருகிறது. வீரமிக்க பெண்ணாக ரக்ஷனா இந்துசூடன் மனதில் தங்குகிறார். அவரது வசன உச்சரிப்புக்கு பாராட்டலாம்.
சிராக் ஜானி, தினேஷ் லம்பாவின் கதாபாத்திரங்கள் இன்னும் மிரட்டி இருக்கலாம். திவி, தேவயானி சர்மா, வேலராமமூர்த்தி, பரணி, ஒய்.ஜி.மகேந்திரன், சரவண சுப்பையா, உள்ளிட்டோரின் நடிப்பிலும் குறையில்லை. பிலிப் ராஜ் சுந்தரின் ஒளிப்பதிவும், ஜிப்ரானின் இசையும் படத்துடன் ஒன்றச் செய்கிறது.
பெரிய அளவில் தெரியாத வரலாற்று கதையை சொன்னது படத்துக்கு பலம். நீளமான காட்சிகளை குறைத்து இருக்கலாம். 14-ம் நூற்றாண்டில் தமிழகத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகளில் இப்படியெல்லாம் நடந்திருக்குமா? என்ற பல ஆச்சரியங்களையும், கலங்கடிக்கும் நிகழ்வுகளையும் படமாக கொடுத்து கவனம் ஈர்த்திருக்கிறார் இயக்குனர் மோகன் ஜி.