"மாயபிம்பம்" திரைப்பட விமர்சனம்
கே.ஜே.சுரேந்தர் இயக்கிய மாயபிம்பம் திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.;
சென்னை,
மருத்துவக் கல்லூரி மாணவரான ஆகாஷ், ஒரு பஸ் பயணத்தில் ஜானகியை பார்த்து காதல் வசப்படுகிறார். அவரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது ஒரு விபத்து நடக்கிறது. அந்த விபத்தே, இருவரையும் மீண்டும் சந்திக்க வைக்கிறது. இருவரும் பேசி பழகுகிறார்கள்.
இதற்கிடையில் ஜானகி குறித்து ஆகாசுக்கு அவரது நண்பர்கள் சில விஷயங்களை கூற அவர் அதிர்ச்சி அடைகிறார். இருந்தாலும் அவர்களின் பேச்சை உதாசீனம் செய்யவும் முடியாமல், நம்பவும் முடியாமல் தடுமாறுகிறார். இதையடுத்து நண்பர்களின் திட்டப்படி ஜானகியை தனியாக வெளியே அழைத்து செல்கிறார் ஆகாஷ். அப்போது அங்கு எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறுகிறது. அவை என்ன? என்பதே மீதி கதை.
இயல்பான நடிப்பை காட்டி ஆகாஷ் கவனம் ஈர்க்கிறார். இப்படி செய்துவிட்டோமே... என்று வருந்தும் காட்சிகளில் கைதேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார். பக்கத்து வீட்டு பெண் போல் மிக எளிமையாக இருக்கும் ஜானகி, முதிர்ச்சியான நடிப்பை காட்டி மிரட்டுகிறார். காதலையும், ஏமாற்றத்தையும் கண்கள் மூலம் அவர் வெளிப்படுத்தும் இடம் அழகு. அவருக்கு இனி நிறைய வாய்ப்புகள் வரலாம்.
ஆகாசின் நண்பர்களாக வரும் ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண்குமார் ஆகியோர் புதுமுகங்கள் என்றாலும், எந்தவித பதற்றமும் இன்றி இயல்பாக நடித்திருக்கிறார்கள். இதர நடிகர் - நடிகைகளின் தேர்வும், நடிப்பும் நன்று.
எட்வின் சகாயின் ஒளிப்பதிவு காட்சிகளை கச்சிதமாக கடத்தியுள்ளது. நந்தாவின் இசை படத்துடன் ஒன்ற செய்கிறது. பின்னணி இசை பிரமாதம். சரியான திரைக்கதை நகர்வு படத்துக்கு பலம். யூகிக்க முடிந்த காட்சிகள் பலவீனம்.
ஒரு சாதாரண காதல் கதையை, அழகியல் நிறைந்த கவிதையாக மட்டுமல்லாமல் கனத்த இதயங்களை சுமக்க செய்யும் அற்புதமாக படகாகவும் இயக்கி நீந்த விட்டுள்ளார், இயக்குனர் கே.ஜே.சுரேந்தர். கிளைமேக்ஸ் அதிர்வை தருகிறது.