"பராசக்தி"... தீ பரவியதா?- படம் எப்படி இருக்கு.. விமர்சனம்
சுதா கொங்கரா இயக்கிய "பராசக்தி" படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.;
சென்னை,
1960 காலகட்டத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றிய கதை
புறநானூறு என்ற பெயரில் மாணவர் புரட்சி படை நடத்தி வரும் சிவகார்த்திகேயன் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.
அப்படி ஒரு போராட்டத்தின் போது ஒரு ரெயிலை வழிமறித்து சிவகார்த்திகேயன் தலைமையிலான குழுவினர்கள் எரிக்கிறார்கள். அப்போது அந்த ரெயிலில் பயணிக்கும் போலீஸ் அதிகாரியான ரவி மோகனுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் சண்டை நடக்கிறது. இதில் ரவி மோகனின் விரல் பறிபோகிறது.
இந்த சூழலில் தனது உயிர் நண்பனை போராட்டத்தின் போது பறிகொடுக்கும் சிவகார்த்திகேயன், அன்று முதல் போராட்டத்தை கைவிடுகிறார். தன்னால் யாரும் பாதிப்பு அடைந்து விடக்கூடாது என்று போராட்ட உணர்வை தன் மனதிலேயே குழி தோண்டி புதைக்கிறார். அதே வேலை சிவகார்த்திகேயனை பழிவாங்க ரவி மோகன் துடித்துக் கொண்டிருக்கிறார்.
சில ஆண்டுகள் கடந்து போக சிவகார்த்திகேயன் தம்பி அதர்வாவும் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் குதிக்கிறார். போராட்ட களத்தில் இருந்து தம்பியை பின்வாங்க செய்யும் முயற்சிகளில் சிவகார்த்திகேயன் தொடர்ந்து ஈடுபடுகிறார்.
இப்படியான சூழலில் மதுரையில் நடக்கும் ஒரு விழாவில் முதல்-அமைச்சர் கலந்து கொள்ளும் சூழலில், கருப்புக் கொடி காட்டுவது என்ற முயற்சியை அதர்வா தலைமையிலான குழுவினர் திட்டமிடுகிறார்கள். அதே வேளையில் இந்தி தெரியாத காரணத்தால் மத்திய அரசின் வேலை பரிபோக அதிர்ச்சியில் சிவகார்த்திகேயனும் அங்கு வந்து சேர்கிறார். போராட்டத்தை தடுத்து நிறுத்த ரவி மோகனும் அங்கு விரைகிறார்.
அதன் பிறகு என்ன ஆனது? போராட்டம் திட்டமிட்டபடி நடந்ததா? சிவகார்த்திகேயனை, ரவி மோகன் சந்தித்தாரா? என்ற பரபரப்பான கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி கதை.
புரட்சி ஒரு பக்கம், எதார்த்தம் மறுபக்கம் என இருவேறு பரிமாணங்களில் சிவகார்த்திகேயன் கலக்கி இருக்கிறார். இதுவரை காதல், காமெடியில் கலக்கி வந்த சிவகார்த்திகேயன் முதல் முறையாக புரட்சி போராட்டம் என்ற பாதையில் பயணித்திருக்கிறார். சாட்டையடி வசனங்களும் பேசி கவனிக்க வைக்கிறார்.
ஹீரோவாக பார்த்து பழக்கப்பட்ட ரவி மோகன், முதல் முறையாக வில்லனாக வெளுத்து கட்டி உள்ளார் பார்வையிலேயே கொலை வெறியை காட்டுகிறார். தமிழ் சினிமாவுக்கு மிரட்டலான வில்லன் தயார். புரட்சி புயலாக அதர்வா கலக்குகிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் சிறப்பு சேர்க்கிறார்.
அழகு பதுமையான ஸ்ரீலீலா நடிப்பிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். தமிழ் சினிமாவில் திறமையான கதாநாயகி தயார். போயா போ என்று அவர் சொல்வது அழகு. இதர நடிகர், நடிகைகள் அத்தனை பேரும் கொடுத்த கதாபாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளார்கள்.
ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு 1960 காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. ஜிவி பிரகாஷின் இசை படத்துக்கு பலம் சேர்த்துள்ளது. பின்னணி இசையும் பிரமாதம். பரபரப்பான காட்சிகள் படத்துக்கு பலம். லாஜிக் மீறல்கள் ஆங்காங்கே இருந்தாலும், வலுவான திரைக்கதை அதை மறக்கடிக்க செய்கிறது.
உண்மைச் சம்பவங்களை நினைவு கூறும் வகையில், பரபரப்பான கதைக்களத்தில் காட்சிகளை நகர்த்தி மீண்டும் ஒருமுறை தனது முத்திரையை ஆழமாக பதித்துள்ளார் இயக்குனர் சுதா கொங்கரா.