பவன் கல்யாணின் “ஓஜி” இன்னொரு பாட்ஷாவா? - சினிமா விமர்சனம்
சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்துள்ள ‘ஓஜி’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.;
அதிரடி - ஆக்ஷன் நிறைந்த கேங்ஸ்டர் கதை.
ஜப்பானில் மிகப்பெரிய போர்வீரனின் மகனான பவன் கல்யாண், அனைத்து தற்காப்பு கலைகளையும் கற்று தேர்கிறார். இதற்கிடையில் மிகப்பெரிய படுகொலை சம்பவத்தில் இருந்து தப்பிக்கும் பவன் கல்யாண், ஜப்பானை விட்டு இந்தியாவுக்கு கப்பலில் தப்பி வருகிறார். அப்போது கப்பலில் அறிமுகமாகும் பிரகாஷ்ராஜ், அவருக்கு அடைக்கலம் தருவதுடன் தனது பிள்ளை போல வளர்க்கிறார். தனது மறைமுக வேலைகளுக்கும் பயன்படுத்தி கொள்கிறார். பிரகாஷ்ராஜின் குடும்பத்தின் பாதுகாவலராகவே மாறும் பவன் கல்யாண், ஒருகட்டத்தில் கேங்ஸ்டர் தொழிலை விட்டு, அமைதியான வாழ்க்கை வாழ நினைக்கிறார்.பிரகாஷ்ராஜிடம் இருந்து விலகிச் செல்லும் பவன் கல்யாண், பிரியங்கா மோகனை திருமணம் செய்து தான் உண்டு, தன் வேலை உண்டு என்று வாழ்ந்து வருகிறார்.
இதற்கிடையில் பிரகாஷ்ராஜூக்கு சொந்தமான துறைமுகத்தில் வெடிபொருட்கள் வருகின்றன. அதை பிரகாஷ்ராஜின் மகன் தடுக்க முயல, ஒருகட்டத்தில் சிலரால் கொலை செய்யப்படுகிறார். இதன் பின்னணியில் மிகப்பெரிய மாபியா கூட்டம் இருப்பது தெரியவருகிறது. இது பவன் கல்யாண் குடும்பத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வெடிபொருட்கள் பின்னணியில் உள்ள உலகளாவிய மாபியா யார்? அவரை பவன் கல்யாண் எப்படி சமாளித்தார்? என்பதே மீதி கதை.
அடாவடி பேர்வழி, அமைதியான ஆசாமி என இருவேறு நிலைகளில் நடிப்பால் அசத்துகிறார், பவன் கல்யாண். அதிகம் பேசாமல் அடக்கி வாசிக்கும் அவர், ஆக்ஷன் காட்சிகளில் வெறியாட்டம் ஆடுகிறார். அதிரடியில் வெளுத்து வாங்குகிறார். சண்டை காட்சிகளில் 'ரிஸ்க்' எடுத்து நடித்துள்ளார். பிரியங்கா மோகனை, இன்னும் பயன்படுத்தி இருக்கலாம். ஓரிரு காட்சிகளே வந்து போகிறார். இடைவெளி காட்சியில் கவனம் ஈர்க்கிறார்.
பிரகாஷ் ராஜின் அனுபவ நடிப்பு பளிச்சிடுகிறது. அர்ஜுன் தாஸ், ஷ்ரேயா ரெட்டி ஆகியோரும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு சிறப்பு சேர்த்துள்ளனர். வில்லனாக வரும் இம்ரான் ஹாஸ்மி பெரியளவில் ஈர்க்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ரவி கே.சந்திரன் மற்றும் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு படத்தை தாங்கி பிடித்திருக்கிறது. தமனின் இசையும், பின்னணி இசையும் படத்துடன் ஒன்ற செய்கிறது.
அதிரடி நிறைந்த ஆக்ஷன் காட்சிகள் படத்தின் பலம். இடைவேளைக்கு பிறகு படத்தின் வேகம் குறைகிறது. வழக்கமான ஹீரோயிசத்தை தாங்கி பிடிக்கும் கதையாக மாறிப்போவதால், சுவாரசியம் குறைந்துவிட்டது. அழுத்தம் நிறைந்த காட்சிகள் 'மிஸ்ஸிங்'.
பவன் கல்யாணை அட்டகாசமாக காட்ட விதவிதமாக காட்சிகளுக்காக மெனக்கெட்டிருக்கும் இயக்குனர் சுஜித், திரைக்கதையிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் படம் இன்னும் 'வெயிட்' காட்டியிருக்கும்.
ஓ.ஜி. - பில்டப் மட்டுமே.