பிரபாஸின் "தி ராஜா சாப்" திரைப்பட விமர்சனம்
மாருதி இயக்கிய தி ராஜா சாப் திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.;
சென்னை,
பெற்றோர் ஆதரவில்லாமல் வளரும் பிரபாஸ், ஒரு பாட்டியின் பராமரிப்பில் வளருகிறார். அந்த பாட்டி தொலைந்து போன கணவர் பற்றியே எப்போதும் பேசிக்கொண்டு இருக்கிறார்.
கண்டிப்பாக தன் கணவரை பார்க்க வேண்டும் எனவும் திட்டவட்ட முடிவுடன் வைராக்கியமாக இருக்கிறார். இதையடுத்து பாட்டியின் கனவை நிறைவேற்றும் வகையில், தொலைந்து போன தாத்தாவை தேடி புறப்படுகிறார் பிரபாஸ்.
அப்போது அந்த தாத்தா சஞ்சய் தத் மிகப்பெரிய கொடூரமான மந்திரவாதி என்று தெரியவருகிறது. ஒருகட்டத்தில் சஞ்சய் தத்தை நெருங்க முயற்சிக்கும் பிரபாசுக்கு இன்னும் பல அதிர்ச்சிகள் வந்து சேருகின்றன.
ஒருகட்டத்தில் தாத்தா சஞ்சய் தத்துடன் மோத வேண்டிய சூழலும் ஏற்படுகிறது. இது பிரபாசின் வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்களையும் ஏற்படுத்துகிறது. அதில் இருந்து பிரபாஸ் எப்படி மீண்டார்? இதன் பின்னணி என்ன? என்பதே கதை.
காதல், காமெடி, ரொமான்ஸ் என தனது பங்குக்கு ரசித்து விளையாடியுள்ளார், பிரபாஸ். இதுவரை ஆக்ஷன் களத்தில் பயணித்த அவர், இந்தமுறை காமெடி கலாட்டாவில் நுழைந்து குழந்தைகளையும் குஷிப்படுத்தியுள்ளார். ஆனால் பிரபாஸ் ரசிகர்கள் எதிர்பார்த்த விஷயங்கள் மிஸ்ஸிங். பில்டப்பில் மட்டுமே புகுந்து புகுந்து வண்டி ஓட்டியுள்ளார்.
மாளவிகா மோகனன், நித்தி அகர்வால், ரித்தி குமார் என படத்தில் மூன்று கதாநாயகிகள் அழகிலும், சில இடங்களில் தாராளமாகவும் இருந்து கண்களுக்கு விருந்து தருகிறார்கள். பாடலில் 'குஷி' நிச்சயம்.
மந்திரவாதி தாத்தாவாக நடித்திருக்கும் சஞ்சய் தத் மற்றும் பாட்டியாக நடித்திருக்கும் சரினா வாகப் இருவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். சஞ்சய் தத் படம் முழுக்க கலகலப்பூட்டுகிறார். தேவையான இடங்களில் பயமுறுத்தவும் செய்கிறார். பொம்மன் இரானி உள்ளிட்ட அனைவருமே கொடுத்த வேலைக்கு நியாயம் சேர்த்து நடித்துள்ளார்கள்.
கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவு பார்வையாளர்களுக்கு ஆறுதல். காட்சிகள் கலர்புல்லாக இருக்கிறது. தமன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையும் ஓகே.
கலகலப்பான காட்சிகள் படத்துக்கு பலம். மெதுவாக நகரும் திரைக்கதை பலவீனம். தேவையற்ற பல காட்சிகளை நீக்கியிருக்கலாம். லாஜிக் மீறல்கள் கொட்டிக் கிடக்கிறது.
தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடித்து அலுத்துப்போன பிரபாசுக்கு, மூன்று நாயகிகளை வைத்து ஆறுதல் ஒத்தடம் கொடுத்திருக்கும் இயக்குனர் மாருதி, குழந்தைகளை மகிழ்விக்கும் படைப்பாக படத்தை லாஜிக் பார்க்காமல் இயக்கியுள்ளார்.
ராஜாசாப் - சோதிக்கிறார்.