நாயன்மார்கள் வழியில் மக்களை ஆன்மீக நெறிக்கு அழைக்கும் ஆதியோகி ரதங்கள்: பேரூர் ஆதீனம் அருளுரை

ஆதியோகி ரதங்கள், மஹாசிவராத்திரி வரையிலான இரண்டு மாத காலத்தில், 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக பயணிக்க உள்ளது.;

Update:2025-12-18 01:25 IST

கோவை,

ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடைபெறுகிறது.  இந்தாண்டு ஆதியோகி ரத யாத்திரையை தென் கைலாய பக்தி பேரவையுடன் இணைந்து தமிழ்நாட்டின் பாரம்பரிய ஆதீனங்கள் நடத்துகின்றன. இம்முறை 250-க்கும் மேற்பட்ட பாடல் பெற்ற தலங்கள் வழியாக ஆதியோகி ரதம் பயணிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவையில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில், மேற்கு மண்டலத்திற்கான ஆதியோகி ரத யாத்திரையின் தொடக்க விழா இன்று (17/12/2025) நடைபெற்றது. இவ்விழாவில் பேரூர் மற்றும் சிரவை ஆதீனங்கள் கலந்து கொண்டு, ஆதியோகி ரதங்களை தொடங்கி வைத்து அருளாசி வழங்கினர்.

இவ்விழாவில் பேரூர் ஆதீனம் பேசுகையில், “வெள்ளிங்கிரி மலை ‘தென்கயிலை’ என போற்றப்படுகிறது. கயிலாயம் செல்வது உடலாலும் பொருளாலும் கடினமான காலத்தில், எளிய முறையில் கயிலாய நாதனை தரிசிக்க வழிகாட்டுவது இந்த தென்கயிலை மலை. அந்த மலையின் அடிவாரத்தில் யோக முகத்துடன் ஆதியோகி எழுந்தருளியிருப்பது பேரருளாகும்.

1500 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் தலங்கள் தோறும் சென்று மக்களை நல்வழிப்படுத்தினார்கள். அதுபோலவே, இன்றைக்கு இந்த ஆதியோகி ரதங்கள் இல்லங்கள் தோறும் எழுந்தருளி மக்களை ஆன்மீக செந்நெறிக்கு அழைக்கின்றன.

ஆற்றுநீர் கடலை நோக்கி செல்லும்போது, மீன்கள் எதிர்நீச்சல் போட்டு மேலே வருவது போல, இங்கிருந்து புறப்படும் இந்த ரதங்கள் மக்களை சிவராத்திரி பெருவிழாவை நோக்கி ஈஷா யோக மையத்துக்கு அழைத்து வரக்கூடிய உன்னத பணியை செய்கின்றன. திருஞானசம்பந்தர் காலத்தில் நடந்த நெறியை இன்றைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் ஆன்மீக இயக்கமாக இந்த ரத யாத்திரை விளங்குகிறது” என்றார்.

சிரவை ஆதீனம் பேசுகையில், “மார்கழி திங்கள் இறைவனுக்குரிய சிறப்பு மாதம். ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளை உளமாக எழுந்தருள செய்து வழிபடும் இந்த மாதம், திருப்பாவை, திருவெம்பாவை போன்ற திருமுறைகள் வழியாக இறைவனை அடையும் நெறியை நமக்கு காட்டுகிறது. இந்த ஆதியோகி ரத யாத்திரை மார்கழியிலிருந்து மாசி மாத சிவராத்திரி வரை தமிழகம் முழுவதும் பயணித்து, இல்லங்கள் தோறும் இறைவனுடைய திருவடியை சிந்திக்க செய்கிறது.

தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற அருளாளர்களின் சிந்தனையை செயல்படுத்தும் உன்னத முயற்சியே இந்த ரத யாத்திரை. குருவின் திருவடியை பற்றி கொள்வதன் மூலமாகத்தான் இறைவனை அடைய முடியும். இல்லங்கள் தோறும் எழுந்தருளும் ஆதியோகியின் தரிசனம், மக்களின் பிறவி பயனை அடைய செய்யும்.

தமிழகம் முழுவதும் பல திருத்தலங்களுக்கும் கிராமங்களுக்கும் பயணிக்கும் ஆதியோகி ரத யாத்திரை, சிவபக்தி, திருமுறை மரபு மற்றும் ஆன்மீக ஒற்றுமையை மக்களிடையே மேலும் வலுப்படுத்தும் ஒரு மாபெரும் ஆன்மீக முயற்சியாக அமைந்துள்ளது" என கூறினார்.

ஆதியோகி ரதங்கள், மஹாசிவராத்திரி வரையிலான இரண்டு மாத காலத்தில், 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக, சுமார் 30 ஆயிரம் கிலோமீட்டர் பயணிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்