அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில்
சாஸ்தா வரம் அருளியவுடன் வற்றாத அழகிய சுனையாக கனகமணி உருமாறினார். அருகில் காவலாக சாஸ்தா எழுந்தருளினார்.;
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே மேலப்புதுக்குடியில் இயற்கை எழில்சூழ்ந்த தேரிக்காட்டின் நடுவில் தீராத நோய்களை தீர்க்கும் அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் உள்ளது.
தவம் கலைந்த முனிவர்
முன்பு ஸ்ரீவைகுண்டத்தை தலைமையிடமாக கொண்டு சிங்கவர்மன் என்ற மன்னர் ஆட்சி புரிந்தார். அங்குள்ள தேரிப்பகுதியில் பளிங்கு போன்ற சுனையில் இருந்து மக்கள் நீர் எடுத்து பருகி வந்தனர். ஒருமுறை அப்பகுதியைச் சேர்ந்த கனகமணி என்ற இளம்பெண் தண்ணீர் எடுத்து சென்றபோது, கால் இடறி கீழே விழுந்தார். அவர் குடத்தில் சுமந்து வந்த தண்ணீர், பாதையோரம் உள்ள கரையான்புற்றில் விழுந்தது. இதில் புற்று கரைந்தபோது, அதில் இருந்து வெளிப்பட்ட முனிவர் மிகவும் கோபமடைந்தார். அவர் பல ஆண்டுகளாக தவம் இருந்ததில், அவரைச்சுற்றி கரையான் புற்று உருவாகி இருந்தது.
சினமுற்ற முனிவர், ‘‘என் மீது தண்ணீர் கொட்டிய உனது கையில் இருந்து இனி யார் தண்ணீர் வாங்கி பருகினாலும் இறந்து விடுவார்கள், இந்த உண்மையை யாரிடம் கூறினாலும் நீயும் மடிந்து போவாய், இறுதிக்காலத்தில் செய்யாத குற்றத்துக்காக தண்டனை பெற்று இறப்பாய்’’ என்று அடுக்கடுக்காக சாபமிட்டார்.
முனிவரின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டார் கனகமணி. இதனால் சற்று மனமிரங்கிய முனிவர், ‘‘கொடுத்த சாபத்தை மாற்ற முடியாது, நீ இறக்கும் தருவாயில் கூறும் அனைத்தும் பலிக்கும், இறந்தபிறகு சொர்க்கத்துக்கு செல்வாய்’’ என்று கூறி சென்றார். தனது விதியை நினைத்து வருந்திய கனகமணி திருமணம் செய்யாமல் தனியாகவே வாழ்ந்து வந்தார்.
அதிசய மாங்கனி
இதற்கிடையே மன்னர் சிங்கவர்மன் சாகாவரம் கேட்டு தவமிருந்தபோது, அவர் முன் தோன்றிய சிவபெருமான், ‘‘தேரியில் சுனை அருகில் உள்ள மாமரத்தில் இருந்து தினமும் நண்பகலில் ஒரு கனி பழுத்து விழும். அதனை தினமும் உண்ண வேண்டும். ஒருநாள் கனியை சாப்பிடாவிட்டாலும் 3-வது நாளில் மடிவாய்’’ என்று வரம் கொடுத்தார். இதையடுத்து, கனியை எடு்த்து வந்து கொடுப்பதற்காக 4 காவல் வீரர்களை நியமித்தார் மன்னர்.
ஒருநாள் கனகமணி சுனையில் தண்ணீர் எடுத்துவிட்டு வீடு திரும்பினார். அப்போது அதிசய மாமரத்தில் இருந்து கனி பழுத்து அந்த வழியாக நடந்து சென்ற கனகமணியின் தண்ணீர் குடத்துக்குள் விழுந்தது. இதனை அறியாமல் அவர் குடத்துடன் வீட்டை நோக்கி புறப்பட்டார்.
தண்ணீர் கேட்ட தேவதைகள்
அப்போது எதிரில் வந்த 21 தேவாதி தேவதைகள், கனகமணியிடம் ‘‘தாகமாயிருக்கிறது தண்ணீர் தாருங்கள்’’ என்று கேட்டனர். கனகமணிக்கு தான் பெற்ற சாபம் நினைவுக்கு வந்ததால் ‘‘தண்ணீர் தர முடியாது, அருகில் உள்ள சுனையில் சென்று பருகுங்கள்’’ என்று கூறி புறப்பட்டார். எனினும் தேவாதி தேவதைகள், ‘‘நீ தண்ணீர் தரவில்லையென்றால் இப்போதே மடிந்துவிடும் நிலையில் உள்ளோம்’’ என்று கெஞ்சினார்கள். ஆனாலும் தண்ணீர் கொடுக்க மறுத்துவிட்டார், கனகமணி.
இதற்கிடையே நண்பகல் வேளை கடந்தும் காவலர்கள் மாங்கனியை கொண்டு வராததால், காவலர்களிடம் விசாரித்த மன்னர், மாங்கனியை யாரேனும் திருடிச் சென்றிருக்கலாம் என்று கருதி, அப்பகுதியில் உள்ள அனைவரின் வீடுகளிலும் சோதனை செய்ய உத்தரவிட்டார். அதன்படி அனைவரின் வீடுகளுக்கும் சென்று காவலர்கள் சோதனையிட்டனர்.
அப்போது கனகமணி வீட்டில் உள்ள தண்ணீர் குடத்தில் மாங்கனி இருப்பதைப் பார்த்து, அவரை மன்னர் முன்பாக அழைத்து வந்தனர். அங்கு வந்த தேவாதி தேவதைகளும் கனகமணிக்கு எதிராக சாட்சி கூறினர். தாங்கள் உயிர்போகும் நிலையில் தண்ணீர் கேட்டும், கனகமணி தண்ணீர் வழங்காமல் குடத்துடன் சென்றதையும் கூறினர்.
தண்டனை
இதனால் கனகமணிதான் குற்றவாளி என கருதி அவரை உயிரோடு எரித்துக்கொல்ல உத்தரவிட்டார், மன்னர். அப்போது மூதாட்டி வடிவில் வந்த பேச்சியம்மன் மன்னரிடம், ‘‘கனகமணி திருடவில்லை, மாங்கனி தானாகத்தான் குடத்தில் விழுந்தது’’ என்றார். எனினும், செய்யாத குற்றத்துக்காக கனகமணி உயிரோடு தீ வைத்து எரிக்கப்பட்டார். சாகும் நிலையில் தனது இஷ்ட தெய்வமான சாஸ்தாவை வேண்டி, ‘‘செய்யாத குற்றத்துக்காக தண்டனையை அனுபவிக்கிறேன். இதற்கு நீயே பொறுப்பு’’ என்று கூறி உயிரை விட்டார்.
சுனையாக மாறிய கனகமணி
அப்போது அங்கு தோன்றிய சாஸ்தா, ‘‘நீ விரும்பினால் உனக்கு மீண்டும் உயிர் தருகிறேன்’’ என்று கனகமணியிடம் கூறினார். வாழ்நாள் முழுவதும் சாபத்துடன் வாழ விரும்பாத கனகமணி, ‘‘மீண்டும் எனக்கு ஒரு பிறவி வேண்டாம். உங்கள் எல்லையில் உள்ள தேரிக்காட்டில் வற்றாத சுனையாக இருக்க விரும்புகிறேன். எனது சுனை நீரை பருகினால் சகல நோய்களில் இருந்தும் விடுபட்டு நல்வாழ்க்கை வாழலாம் என்ற வரம் வேண்டும். சுனைக்கு அய்யனே காவலாக இருக்க வேண்டும்’’ என்று வரம் கேட்டார்.
வற்றாத சுனை
அவ்வரத்தை சாஸ்தா அருளியவுடன் அங்கு வற்றாத அழகிய சுனையாக கனகமணி உருமாறினார். அதன் அருகில் காவலாக சாஸ்தா தனது தேவியர்களுடனும், பரிவாரமூர்த்திகளுடனும் எழுந்தருளினார். பின்னர் உண்மையறிந்த மன்னர் தவறிழைத்ததை உணர்ந்து உயிரை மாய்த்துக்கொண்டார். தேவதைகளும் மன்னிப்புக்கோர, அவர்களை தனது கண்காணிப்பில் அய்யன் சாஸ்தா வைத்துக்கொண்டார்.
அமைவிடம்
நெல்லை - திருச்செந்தூர் சாலையில் உள்ள அம்மன்புரத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் உள்ளது.
குலதெய்வ வழிபாடு
கோவிலில் பங்குனி உத்திர தினத்தன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி வழிபடுவார்கள். பல குடும்பங்களுக்கும் குல சாஸ்தாவாக அருஞ்சுனை காத்த அய்யனார் விளங்குகிறார். இங்கு வழிபடும் பக்தர்களுக்கு தீராத நோய்கள் தீரும், தொழிலில் மேன்மை, நல்ல வேலைவாய்ப்பு, திருமண யோகம், குழந்தை வரம் கைகூடும் என்பது நம்பிக்கை. பங்குனி உத்திர தினத்தன்று புது தொழில், வியாபாரம் தொடங்குவதற்காக ஏராளமான பக்தர்கள் இங்கு வரவு செலவு நோட்டுகளை வைத்து வழிபடுகின்றனர்.
கனகமணிக்கு ஆதரவாக மூதாட்டி வடிவில் வந்த பேச்சியம்மன் சிலையும் கோவிலில் உள்ளது. கோவில் நுழைவுவாசலில் அரசமரத்தின் அடியில் 100-க்கும் மேற்பட்ட நாகர், குதிரை, யானை சிலைகள் உள்ளன.