பரமத்தி வேலூரில் அம்மையப்பர் திருக்கல்யாணம்
திருக்கல்யாண விழாவில் பரமத்தி வேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.;
சிறப்பு அலங்காரத்தில் அம்மையப்பர்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் மாணிக்கவாசகர் மண்டபத்தில் அம்மையப்பர் திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாண விழாவில் பங்கேற்ற பெண்கள் சக்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து சீர்வரிசை தட்டினை மாணிக்கவாசகர் மண்டபத்திற்கு எடுத்து வந்தனர். பின்னர் மேடையில் அம்மையப்பர் சிலையினை எழுந்தருளச் செய்து கலசங்கள் ஸ்தாபிக்கப்பட்டு யாக வேள்விகள் நடத்தி பூர்ணஹுதி சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் கங்கணங்கள் கட்டி திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
திருக்கல்யாணத்தைத் தொடர்ந்து அனைத்து தெய்வங்களுக்கும் சோடச உபசாரம் செய்து கீர்த்தனைகளுடன், பஞ்சாரத்தி, நட்சத்திர ஆரத்தி ஏகாரத்தி உடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.