பீகாரில் விரைவில் ஏழுமலையான் கோவில்... 10 ஏக்கர் நிலம் வழங்கியது அரசு

கோவில் கட்ட நிலம் வழங்கிய பீகார் அரசுக்கு ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, மாநில மந்திரி லோகேஷ் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.;

Update:2025-12-07 15:44 IST

திருமலை திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏழுமலையான் கோவில் கட்டப்பட உள்ளது. கோவில் கட்டுவதற்காக 10.11 ஏக்கர் நிலத்தை அந்த மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இதற்காக ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, மாநில மந்திரி லோகேஷ் ஆகியோர் பீகார் மாநில அரசுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளனர். அதேபோல், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு பீகார் மாநில அரசை பாராட்டி நன்றியை தெரிவித்துள்ளார்.

அப்போது அவர், பாட்னா மாவட்டத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கு அனுமதி கிடைத்திருப்பது மகிழ்ச்சிகரமான முன்னேற்றம், எனக் குறிப்பிட்டுள்ளார்.

பீகார் மாநில தலைமைச் செயலாளர் பிரத்யா அம்ரித் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவருக்கு அதிகாரப்பூர்வமாக ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், பீகார் மாநிலம் பாட்னா மாவட்டம் மொகாமா காஸ் பகுதியில் உள்ள நிலம் திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒதுக்கப்படுவதாக, தெரிவித்துள்ளார். மேலும் அந்த நிலம் 99 ஆண்டுகள் காலத்துக்கு ஆண்டுக்கு ரூ.1 வீதம் வாடகையில் வழங்கப்படும், என மாநில அரசு அறிவித்துள்ளது.

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, விரைவில் பீகார் மாநில சுற்றுலா வளர்ச்சிக்கழக இயக்குனருடன் ஆலோசனைகள் நடத்தி, பாட்னா மாவட்டத்தில் கோவில் கட்டுமானத்துக்கு தேவையான அனைத்து திட்டங்களும் மேற்கொள்ளப்படும், எனத் தெரிவித்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்