திருப்பதியில் விமரிசையாக நடைபெற்ற தண்ணீரமுது விழா

உற்சவர் மலையப்பசாமி கோவிலின் தெற்கு மாட வீதியில் உள்ள திருமலை நம்பி கோவிலுக்கு எழுந்தருளினார்.;

Update:2026-01-14 10:50 IST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த டிசம்பர் மாதம் 19-ந்தேதி ஆத்யாயன உற்சவம் தொடங்கியது. அந்த விழா நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தன. அதையொட்டி அன்று உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு திவ்ய பிரபந்த பாராயணங்கள் நடந்தன. கடந்த 25 நாட்களாக நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களை மூலவர் ஏழுமலையானுக்கு பாராயணம் செய்தனர்.

நேற்று முன்தினம் இறுதி நாள் என்பதால், தண்ணீரமுது விழா நடந்தது. உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்பசாமி கோவிலின் தெற்கு மாட வீதியில் உள்ள திருமலை நம்பி கோவிலுக்கு எழுந்தருளினார்.

வைணவத் துறவியான திருமலை நம்பியின் நினைவாக, வருடாந்திர தண்ணீரமுது விழா பிரமாண்டமாக நடத்தப்பட்டது. மாலை சஹஸ்ர தீபாலங்கார சேவைக்குப் பிறகு மலையப்பசாமி கோவிலின் மாட வீதிகளில் ஊர்வலமாக வாகன மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

திருமலை நம்பியின் வம்சாவழியினர் ஆகாச கங்கையில் இருந்து புனித நீரை பானைகளில் தலையில் சுமந்து வாகன மண்டபத்துக்கு கொண்டு வந்தனர். வேத மந்திரங்கள் முழங்க, ஜீயர் சுவாமிகள், ஆச்சார்யர்கள் மற்றும் அறிஞர்கள் இந்தப் புனித நீரை மூலவர் ஏழுமலையானுக்கு சமர்ப்பித்தனர். பின்னர் அர்ச்சகர்கள் திருமலை நம்பியின் திருமொழிப் பாசுரங்களை ஓத, மூலவர் ஏழுமலையானின் பாதங்களில் உள்ள தங்கக் கவசத்துக்கு இந்தப் புனித நீரால் அபிஷேகம் செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் திருமலை பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்