மன்னார்குடி கோபிலர் கோபிரளயர் கோவில் கும்பாபிஷேகம்
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத வாசுதேவப்பெருமாள் மற்றும் மகரிஷிகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.;
மன்னார்குடியில் கோபிலர் கோபிரளயர் கோவில் என்று அழைக்கப்படும் வாசுதேவ பெருமாள் கோவில் உள்ளது.
கோபிலர், கோபிரளயர் என்ற இரண்டு முனிவர்கள் கிருஷ்ண அவதாரத்தை காண்பதற்காக புறப்பட்டபோது அங்கே வந்த நாரதர், ‘கிருஷ்ணாவதாரம் முடிந்து விட்டது, இனி கிருஷ்ணரை தரிசிக்க வேண்டும் என்றால் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஹரித்ராநதி தெப்பக்குளத்தில் சென்று தவம் இயற்றுங்கள்’ என்று கூறினார். அதன்படி இங்கு வந்து தவம் இயற்றிய கோபிலர் , கோபிரளயர் என்ற முனிவர்களுக்காக கிருஷ்ணாவதாரத்தின் 32 சேவைகளையும் பகவான் விஷ்ணு காட்டி அருளியதாக தல புராணம் கூறுகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த மன்னார்குடி வாசுதேவ பெருமாள் கோவிலில் குடமுழுக்கு செய்ய தீர்மானிக்கப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டன. இப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
மூன்று நாட்களாக யாக குண்டங்களில் மங்களப் பொருட்களை சமர்ப்பித்து பூஜை செய்தனர். இன்று காலை 6 மணிக்கு பூர்ணாஹுதி செய்யப்பட்டு கடம் புறப்பாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு செய்தனர். பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வாசுதேவப்பெருமாள் மற்றும் மகரிஷிகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சியில் ராஜகோபாலசாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் கருடர் இளவரசன், கோவில் நிர்வாக அதிகாரி மாதவன், ராஜகோபாலசாமி அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கே.கே.பி.மனோகரன், லதா வெங்கடேஸ்வரன், சிவகுமார், நகர மன்ற உறுப்பினர் பாரதி மோகன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.